உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமெரிக்கவாசிகளிடம் பணம் சுருட்டிய வழக்கில் வங்கி மாஜி அதிகாரி கைது

அமெரிக்கவாசிகளிடம் பணம் சுருட்டிய வழக்கில் வங்கி மாஜி அதிகாரி கைது

சென்னை:அமெரிக்காவில் வசிக்கும் மூத்த குடிமக்களின் நிரந்த வைப்பு தொகை, 4.37 கோடி ரூபாயை மோசடி செய்த வழக்கில், தனியார் வங்கியின் முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டார்.அண்ணா நகரைச் சேர்ந்தவர் விஜய் ஜானகிராமன், 72. இவரது மனைவி மல்லிகா, 68. இவரும், அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

பண மோசடி

இவர்கள், அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், நிரந்தர வைப்பு தொகையாக, 4.37 கோடி ரூபாயை செலுத்தி உள்ளனர். இந்த வங்கி கணக்கை கையாள, சென்னை தி.நகரைச் சேர்ந்த ரவி என்பவருக்கு பவர் எழுதி கொடுத்துள்ளனர்.மேலும், வீட்டு வரி செலுத்துதல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக, தங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ள, ரவியிடம்காசோலைகளையும் வழங்கி உள்ளனர். அந்த காசோலைகளை நம்பிக்கையின் அடிப்படையில், வங்கியின் மேலாளராக இருந்த மஞ்சுளா என்பவரிடம், ரவி கொடுத்து வைத்துள்ளார்.இந்நிலையில், விஜய் ஜானகிராமன், மல்லிகா ஆகியோரின் நிரந்தர வைப்பு தொகைக்கான காலம் முடிந்துவிட்டதால், மொத்த பணத்தையும் எடுக்க வங்கிக்கு, ரவி சென்றுள்ளார். அப்போது, 4.37 கோடி ரூபாயும் முன் கூட்டியே எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.விசாரணையில், விஜய் ஜானகிராமன், மல்லிகா ஆகியோர், தங்களின் நிரந்தர வைப்பு தொகையை முன் கூட்டியே எடுத்ததுபோல, மஞ்சுளா போலியாக கையெழுத்திட்டு, பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கூட்டு சதி

மோசடி செய்த பணத்தை, தன் நீண்ட கால நண்பரான, அயனாவரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரன், 52, மற்றும் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுககுமார், 63, ஆகியோரின் வங்கி கணக்குகளில் செலுத்தியதும் தெரிய வந்தது. மூவரும் கூட்டு சதியில் ஈடுபட்டு, பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, ஜூன் 26ல், நாகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். நேற்று, ஆறுமுககுமாரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ