மேலும் செய்திகள்
'இலக்கு' வைத்து விற்கப்படும் 'சரக்கு'
09-Sep-2025
சென்னை :'பிட்காயின்' எனும் டிஜிட்டல் கரன்சியை இந்திய பணமாக மாற்றுவதில் ஏற்பட்ட குளறுபடியால், சென்னையில் ஆறு பேர் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பரத், 20. இவர், தன் தந்தை தேசியமூர்த்தியை மர்ம கும்பல் கடத்தி வைத்திருப்பதாகவும், 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் விடுவிப்போம் என, மிரட்டுவதாகவும் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இது குறித்து, தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், பெரம்பூர் பகுதியில் தேசிய மூர்த்தியின் மொபைல் போன் சிக்னல் காட்டியுள்ளது. பெரம்பூர் விரைந்த தனிப்படை போலீசார், அங்கிருந்த இருவரை கைது செய்து, ஆறு பேரை மீட்டனர். விசாரணையில் தெரிய வந்ததாவது: ஆயிரம்விளக்கு பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர், தேசியமூர்த்தி. இவரது தோழியான முகப்பேரை சேர்ந்த பாரதி, 55, என்பவர், டிஜிட்டல் கரன்சியான 'பிட்காயின்' வாங்கி விற்கும் வேலை செய்து வந்தார். இதற்காக, தேசியமூர்த்தியின் ரியல் எஸ்டேட் அலுவலகத்தை, பாரதி பயன்படுத்தி வந்தார். அதில் வரும் லாபத்தில், தேசியமூர்த்திக்கு 'கமிஷன்' கொடுத்து வந்தார். பாரதியிடம், நேற்று முன்தினம், புளியந்தோப்பைச் சேர்ந்த அருண்குமார், 36, பார்த்திபன், 52, அரவிந்த், சதீஷ் ஆகியோர், தங்களிடம் 1.50 லட்சம் 'பிட்காயின்' உள்ளதாகவும், அதை ரூபாயாக மாற்றி தரும்படியும் கேட்டுள்ளனர். இதற்காக பாரதி, மும்பையில் உள்ள அகர்வால் என்பவரிடம் பேச, அவர் பணத்தை மாற்றி தருவதாகக் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தன் அலுவலக ஊழியர்களான முரளி, ஸ்ரீதர் ஆகியோரிடம், அகர்வால் 1.38 கோடி ரூபாயை கொடுத்துள்ளார். அவர்கள் ஆயிரம்விளக்கு அலுவலகத்திற்கு பணத்துடன் வந்தனர். இதையடுத்து, அரவிந்த் தன் கணக்கில் இருந்த, 1.50 லட்சம் பிட்காயினை பாரதியின் அக்கவுண்டிற்கு மாற்றினார். ஆனால், பாரதி அக்கவுண்டில் இருந்து, அகர்வாலின் கணக்கிற்கு மாற்றும்போது, அந்த பிட்காயின்கள் காணாமல் போயின. அகர்வாலின் கணக்கிற்கு 'பிட்காயின்' வராததால், அவரது அலுவலக ஊழியர்கள் பணத்தை கொடுக்காமல் திரும்பி சென்றனர். இதனால், பாரதி மற்றும் அவருடைய நண்பர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி, அரவிந்த் கும்பல் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்த தேசியமூர்த்தி, பாரதி, அவரது நண்பரான முகப்பேரைச் சேர்ந்த நந்தகுமார், 44, கார்த்திகேயன், 41, விமல்ராஜ், 34, பிட்காயின் இடைத்தரகர் திரிலோக் சந்தர், 47, ஆகியோரை, நேற்று முன்தினம் கடத்தி உள்ளனர். இந்த நிலையில், பெரம்பூர் அருகே வைத்து அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, பணம் கேட்டு கடத்தலில் ஈடுபட்ட புளியந்தோப்பைச் சேர்ந்த அருண்குமார், 36, வியாசர்பாடியைச் சேர்ந்த பார்த்திபன், 52, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அரவிந்த், சதீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது; எப்படி பணப்பரிமாற்றம் செய்கின்றனர் என, தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Sep-2025