பாம் சரவணனின் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
சென்னை, மார்ச் 25--கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 'பாம்' சரவணன், போலீசாரால் கடந்த ஜன., 14ம் தேதி சுட்டு பிடிக்கப்பட்டார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாம் சரவணனின் மனைவி மகாலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.இம்மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், 'ஏற்கனவே இதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில், பாம் சரவணனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என, அரசு தரப்பில் தெரிவித்ததை ஏற்று, அந்த மனு முடித்து வைக்கப்பட்டது. மீண்டும் அதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். தண்டனை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.