மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத கோலா மீன்கள்
காசிமேடு:காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளில், 50க்கும் மேற்பட்டவை ஞாயிற்றுக்கிழமையான நேற்று, கரை திரும்பின. இதில், 50 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது.இந்நிலையில், சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 3.5 டன் கொண்ட 15க்கும் மேற்பட்ட 200 முதல் 300 கிலோ அளவிலான மயில் கோலா, பன்னி கோலோ மீன்கள் சிக்கியது. இந்த ராட்சத மீனை விசைப்படகிலிருந்து மீனவர்கள் வெளியே எடுத்தனர்.இந்த மீன்கள், 40,000 முதல் 60,000 ரூபாய் வரை விற்பனையாகும் என, மீனவர்கள் தெரிவித்தனர். மருத்துவ குணம் உடைய கோலா மீன்களை மொத்த விற்பனையாளர்கள் ஏற்றுமதி செய்வதற்காக, ஏலத்தில் வாங்கி சென்றனர். பெரிய வகை மீன்களை பொதுமக்களும் நேற்று ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், காசிமேடில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். நேற்றும் மீன்கள் வாங்க, மக்கள் அதிகளவில் குவிந்ததால், மீன் விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது.