உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாய்களுக்கு வாய்ப்பூட்டு; சென்னை மாநகராட்சி அறிவிப்பு

நாய்களுக்கு வாய்ப்பூட்டு; சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: வாய்ப்பூட்டு போடாத வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து வந்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தவிர, அந்நாய்களை பறிமுதல் செய்யவும் ஆலோசித்து வருகிறது.சென்னையில் வளர்ப்பு நாய்களை, காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது, அவற்றுக்கு வாய்மூடியான முகக்கவசம் அணிவது கட்டாயம். சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், நாய்களை வெளியே அழைத்து வர வேண்டும். மேலும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், மாநகராட்சியின் பதிவு உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.வளர்ப்பு நாய்கள், பொதுமக்களை கடித்தால், அதற்கு உரிமையாளர் தான் பொறுப்பேற்க வேண்டும். இதன் வாயிலாக, உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்து உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பின்பற்றாமல், வளர்ப்பு நாய்களை கொண்டு வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தாலும், நாய் வளர்ப்போர் அவற்றை பின்பற்றுவதில்லை.இவற்றால், சாலையில் செல்வோரை சில நேரங்களில் வளர்ப்பு நாய்கள் கடித்து குதறி வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், முகக்கவசம் அணியாமல், சாலைக்கு அழைத்து வரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் தெருநாய்கள் கட்டுப்படுத்துவது முதல், வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகள் வரை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதுடன், 'மைக்ரோசிப்' பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதுவரை, 4,000 தெரு நாய்களுக்கு, 'மைக்ரோ சிப்' பொருத்தப்பட்டு உள்ளது.அதேபோல், வளர்ப்பு நாய்கள் வளர்ப்போர், மாநகராட்சியில் பதிவு செய்வது கட்டாயம். பலர் பதிவு செய்யாமல் உள்ளனர். இதுபோன்ற பதிவு செய்யாத நாய்கள் கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. அதேபோல், முகக்கவசம் அணியாமல் இருந்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையும் விரைவில் அமலுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.93 முதல் வாய்ப்பூட்டு கிடைக்குது

சென்னையில் பெரும்பாலான இடங்களில், பெட்ஸ் கிளினிக் மற்றும் அதற்கான பொருட்கள் விற்பனை மையங்கள் உள்ளன. இங்கு, வளர்ப்பு நாய்களுக்கான உணவு பொருட்கள், அழகு சாதனங்கள் மற்றும் முகக்கவசம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.அதேபோல், 'ஆன்லைன்' விற்பனை தளங்களிலும், நாய்களுக்கான முகக்கவசம், 93 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை பல்வேறு வகைகளில் விற்பனைக்கு உள்ளன.குறிப்பாக, துணி, மூங்கில், ரப்பர், லெதர் உள்ளிட்டவற்றில் தயாரான முகக்கவசம் விற்பனைக்கு உள்ளன. நாயின் முக தாடைகளுக்கு ஏற்ப, பொருத்திக்கொள்ளும் வகையில், அவை வடிவமைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு, குறைந்த செலவு முதல் அதிகபட்ச செலவு வரை, முககவசங்கள் விற்பனைக்கு இருந்தாலும், பெரும்பாலான நாய் வளர்ப்போர், அவற்றை வாங்கி பயன்படுத்தவில்லை. அதனாலே, வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து வரும்போது முகக்கவசம் அணியவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இரண்டு சிறுவர்களை கடித்து குதறிய தெருநாய்கள்

திருவள்ளூர் மாவட்டம்,ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் வெற்றிவேல், 3. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் விளையாடிய சிறுவனை, அங்கு வந்த தெரு நாய் திடீரென கடித்து குதறியது. இதில், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.சிறுவனின் அலறலை கேட்டு வந்த பெற்றோர், நாயை அடித்து துரத்தி சிறுவனை மீட்டனர். உடனடியாக வேலுார் அடுத்த ரத்னகிரி சி.எம்.சி., மருத்துவமனையில், சிறுவனை சேர்த்தனர்.அதேபோல், ஆர்.கே.பேட்டை பஜார் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்திரமவுலி, 14, என்ற சிறுவன், நேற்று முன்தினம் இரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அந்த பகுதியில் புதிதாக சுற்றித் திரிந்த நாய், சந்திரமவுலியை கடித்து குதறியது.அக்கம்பக்கத்தினர் சந்திரமவுலியை மீட்டு, விளக்கணாம்பூடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்காக, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Tselva
மார் 20, 2025 16:18

திமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அரசியல் வியாதிகள் ஆதாயம் தேடாமல் விட மாட்டார்கள்


S.ஷோபனா
மார் 19, 2025 13:30

சென்னையில் நிறைய நாய்கள் FLATSல் வளர்க்கிறார்கள். சினிமா துறையில் உள்ளவர்கள் நிறைய வளர்க்கிறார்கள். தெருவில் நடக்க முடியவில்லை. எல்லா CHANNELல் RULES மாநகராட்சி விளம்பரம் செய்யவும்.


vadivelu
மார் 19, 2025 08:07

சென்னையில் 200 வார்டுகள், வார்டுக்கு 100 நாய்கள், மொத்தம் 20000 முக கவசம் தயாரிக்க பாட்டு இருக்கலாம்.


சகுரா
மார் 19, 2025 07:12

திமுக காரன் இந்த நாய் பூட்டு தயாரிப்பு கம்பெனி நடத்த தயார் ஆகிட்டாங்க போல. தெரு நாய எடுத்து பராமரிக்க வக்கு இல்ல, வந்துட்டாங்க வளர்ப்பு நாய்க்கு உத்தரவு போட


சமீபத்திய செய்தி