சென்னை:''சென்னையில் 579 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. வரும், 24 மணி நேரத்தில் அரசு விளம்பரங்கள் அகற்றப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் கூறினார்.லோக்சபா தேர்தல் அறிவிப்பு, நேற்று வெளியானது. தேர்தல் முடியும் வரை செய்ய வேண்டியவை குறித்து, ரிப்பன் மாளிகையில், கமிஷனர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில், வடக்கு, தெற்கு, மத்தியம் என மூன்று வட்டார அலுவலகங்களில், அந்தந்த தொகுதிக்கான வேட்பு மனுக்கள் வரும் 20ம் தேதி முதல் பெறப்படும்.இத்தேர்தலில், 39.01 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர். மேலும், 944 இடங்களில், 3,719 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 579 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் இல்லை.பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், தேர்தல் நாளன்று நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும், 'சிசிடிவி' கேமரா வாயிலாக மாவட்ட, மாநில அளவில் கண்காணிக்கப்படும்.தேர்தல் நாளின்போது, ஓட்டுப்பதிவுக்கான பொருட்களை வழங்குவதற்காக 16 சட்டசபை தொகுதிகளில், 299 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அரசு கட்டடங்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் அனைத்தும் 24 மணி நேரத்திற்குள் அகற்றப்படும். பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் 48 மணி நேரத்திற்குள்ளும், தனியார் இடங்களில் 72 மணி நேரத்திற்குள்ளும் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேர்தலில் 16,363 அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு, நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தும் நடைமுறை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுக் கருவிகள் 4,494, ஓட்டுப்பதிவு கருவிகள் 13,640, வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் 5,270 பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துள்ள நிலையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, காணொலி கண்காணிப்பு குழு, காணொலி பார்வை குழு, உதவி செலவின பார்வையாளர் குழு, உதவி கணக்கு தணிக்கை குழு ஆகியவை, தலா 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் நான்கு பேர் இருப்பர்.பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் போன்றவற்றிற்கு, https://suvidha.eci.gov.inஎன்ற இணையதளத்தில் 48 மணி நேரத்திற்கு முன் வேட்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும், கட்டடங்கள், சுவர் விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதி வழங்க, அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் தெரிவிக்க, 1950, 1800 425 7012, 044- 2533 3001 - 06 வரையிலான எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.