குரோம்பேட்டை, தாம்பரத்தில் நெரிசல் திக்குமுக்காடிய ஜி.எஸ்.டி., சாலை
தாம்பரம்: தீபாவளி பண்டிகையை ஒட்டி, துணி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வந்தவர்களால், தாம்பரம், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று மதியம் முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, துணி, பட்டாசு, ஸ்வீட், பூ உள்ளிட்ட பொருட்கள் வாங்க, புறநகரின் பல்வேறு இடங்களில் இருந்து, கார், பைக், ஆட்டோ, பேருந்துகளில், நேற்று காலை முதல் மக்கள் வர துவங்கினர். இதனால், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில், நேற்று மதியம் முதல் திரும்பிய இடமெல்லாம் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. புறநகரின் பல்வேறு இடங்களில் இருந்து, ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் நுழைந்ததால், சென்னை மார்க்கமான ஜி.எஸ்.டி., சாலையில், கடும் நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்துார் முதல் பல்லாவரம் வரை வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.