இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் சேதமான குழாய்கள் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரம் பாதிப்பு
சோழிங்கநல்லுார்: கழிவுநீர் குழாய் பதிப்பு, வடிகால்வாய் பணிக்கு பள்ளம் தோண்டும்போது சேதமடையும் குடிநீர் குழாய்களை முறையாக சீரமைக்காததால், கழிவுநீர் கலந்து சுகாதாரமில்லாத குடிநீர் வினியோகிக்கப்படுவதாக, சோழிங்கநல்லுார் மண்டல மக்கள் கூறுகின்றனர். இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பகுதியை உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. இங்கு, கழிவுநீர் குழாய் பதிப்பு, வடிகால்வாய் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக பள்ளம் தோண்டும்போது, குடிநீர் குழாய்கள் சேதமடைகின்றன. அதை உடனே சரி செய்வதில்லை. சிறிய சேதம், பெரிதாகும்போது, அதில் கழிவுநீர் கலக்கிறது. கழிவுநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில், கழிவுநீரை வடிகால்வாயில் விடுவதால், அந்த நீரும் குடிநீருடன் கலக்கிறது. இதனால், கலங்கலாகவும், துர்நாற்றம் வீசியும் வினியோகிக்கப்படும் குடிநீரை, குடிக்கவும், சமைக்கவும் முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். குளிக்க, துணி துவைக்க பயன்படுத்தினால், உடலில் அரிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து, நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: குழாய் பதிப்பு, வடிகால்வாய் கட்டும் பணி துவங்கியதில் இருந்தே, குடிநீர் சுகாதாரமாக வினியோகிக்கப்படுவதில்லை. வரி, கட்டணம் செலுத்தியும் துர்நாற்றம் வீசும் குடிநீரை பருக வேண்டி உள்ளது. மண்டல குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறினால், 'திட்ட பணிகளை வேறு அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். அவர்கள் குழாய் சேதத்தை சரி செய்யாததால், சுகாதாரமில்லாத குடிநீர் வருகிறது. அதனால், அவர்களிடம் கூறுங்கள்' என, அலைக்கழிக்கின்றனர். மண்டல குடிநீர் வாரிய அதிகாரிகள் தான், வார்டுதோறும் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். இதர துறைகள் குழாய்களை சேதப்படுத்தினாலும், வார்டு பொறியாளர்கள் தான் சரிசெய்ய வலியுறுத்த வேண்டும். அவர்கள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய பணியை, எங்களிடம் எப்படி கூற முடியும். வாரிய அதிகாரிகளிடமே ஒற்றுமை இல்லை. உயர் அதிகாரிகள் தலையிட்டு, சுகாதாரமான குடிநீர் வினியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ''கழிவுநீர் குழாய் பதிப்பு பணியால், சில இடங்களில் குடிநீரை முறையாக வினியோகிக்க முடியவில்லை. திட்ட பணி அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.