கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் குளம், பூங்கா பணியை தொடர அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
சென்னை: கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில், பொதுநலன் கருதி மழைநீர் சேமிப்புக்கான குளங்களை அமைக்கும் திட்டம் உட்பட அனைத்து திட்டங்களையும் மேற்கொள்ளலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்திற்கு, 730.86 கோடி ரூபாய் வாடகை பாக்கியை, கிளப் நிர்வாகம் செலுத்த மறுத்தது. இதனால், உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, குத்தகை உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்தது. கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து, 6,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 160.86 ஏக்கர் நிலத்தை மீட்டது. அந்த இடத்தில், 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை துறை சார்பில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக பசுமைவெளி பூங்கா; மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க, நான்கு குளங்கள் அமைக்கும் பணியை துவக்கியுள்ளது. இந்த திட்டங்கள் நிறைவேற்றுவதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஏற்கனவே உள்ள நிலை தொடர உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ''இந்த வழக்கில், ஏற்கனவே நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து உத்தரவு பிறப்பித்ததால், இந்த வழக்கை அவர் விசாரிக்கக்கூடாது. வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும்,'' என்றார். தமிழக அரசின் வருவாய்த் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''பொது நலன் கருதியே திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளதால், தொடர அனுமதிக்க வேண்டும்,'' என்றார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை ரத்து செய்தனர். மேலும், பொது நலன் கருதி, தமிழக அரசு திட்டங்களை மேற்கொள்ளலாம்; தற்போது மழைக்காலம் என்பதால், திட்டம் அவசியம் என குறிப்பிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.