ஐகோர்ட் வக்கீல்கள் மறியல் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பிராட்வே, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நீதிமன்றம் எதிரே, வழக்கறிஞர் கண்ணனை, ஒரு கும்பல் வெட்டிக் கொல்ல முயன்றது.இந்த சம்பவத்தை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும், நேற்று மதியம், சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயிலில், 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலுக்கு நியாயம் வேண்டும்; ராஜஸ்தானில் இருப்பது போல், தமிழகத்திலும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சிறிது நேரத்தில், ஆர்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு தரப்பு வழக்கறிஞர்கள், பிராட்வே - என்.எஸ்.சி., போஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.மருத்துவர் பாதித்தால், அரசு இயந்திரம் முதல், அரசியல் கட்சியினர் வரை முகாமிடுகின்றனர். ஆனால், வழக்கறிஞர்கள் பாதித்தால் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்று ஆவேசமாக கூறி, மறியலில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.இருவழி சாலையிலும், வழக்கறிஞர்கள் அமர்ந்து மறியல் செய்ததால், அப்பகுதிகள் முழுதும், போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் முடங்கியது.பூக்கடை போலீசார், அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். அதை தொடர்ந்து, வழக்கறிஞர்கள் மறியலை கைவிட்டு, நீதிமன்றம் திரும்பினர். பின் போக்குவரத்து சீரானது.திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில், 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், காலடிப்பேட்டை, நீதிமன்ற வாயில் முன், ஒசூர் சம்பவத்தை கண்டித்து, நேற்று காலை, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் சங்க தலைவர் தொண்டன் சுப்பிரமணி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் படுத்து திடீர், சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சமாதானத்தை தொடர்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.அம்பத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், 50க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற வளாக வாயலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.