தியாகி மகன் நடத்திய டீக்கடை இடிப்பு அரசு பதில் அளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை, முன்னறிவிப்பு இன்றி டீக்கடையை இடிக்கப்பட்டதை எதிர்த்து, சுதந்திர போராட்ட வீரரின் மகன் தொடர்ந்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆவடியை சேர்ந்த வி.எஸ்.பீட்டர் என்பவர் தாக்கல் செய்த மனு: என் தந்தை சவரிமுத்து, சுதந்திர போராட்ட வீரர். பர்மா அகதியாக, 1968ம் ஆண்டு குடும்பத்துடன் தமிழகத்தில் குடியேறினார். தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில், நான் 1969ல், 'லோடுமேன்' பணியில், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டேன். பணியின்போது ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டது. விபத்தால் பணி செய்ய முடியவில்லை. இதையடுத்து, நுகர்பொருள் வாணிப கழக, அண்ணா நகர் கிட்டங்கி வளாகத்தில், டீக்கடை நடத்தி கொள்ள, அப்போதைய நிர்வாக இயக்குநர் அனுமதி வழங்கினார். கடந்த 49 ஆண்டுகளாக, எந்த இடையூறும் இன்றி டீக்கடை நடத்தி வந்தேன். கடைக்கான வாடகை தொகையை, 2024 ஜூன் 18ம் தேதி வரை முறையாக செலுத்தி வந்தேன். அதன்பின், வாடகை தொகையை வாங்க அதிகாரிகள் மறுத்தனர். முன்னறிவிப்பு இன்றி, கடையின் மின் இணைப்பை துண்டித்தனர். நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநரிடம் புகார் அளித்தேன். இந்நிலையில், கடந்த மாதம் 13ல் முன்னறிவிப்பின்றி டீக்கடை கட்டடத்தை இடித்துவிட்டனர். கடையை நம்பித்தான் என் வாழ்வாதாரம் உள்ளது. கடையில் வைத்திருந்த பொருள்கள், 25,000 ரூபாய் ஆகியவை காணாமல் போயின. கடையை இடித்து மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு, இடித்து தள்ளப்பட்ட கடையை கட்டித் தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த மனுவுக்கு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்., 15க்கு தள்ளிவைத்தார்.