உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குரோம்பேட்டை, பல்லாவரம் கால்வாயோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கெடு

குரோம்பேட்டை, பல்லாவரம் கால்வாயோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கெடு

சென்னை: குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட காரணமான கால்வாய் ஆக்கிரமிப்புகளை, நான்கு மாதங்களுக்குள் அகற்றும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த டேவிட் மனோகர் என்பவர் தாக்கல் செய்த மனு: கடந்தாண்டு பெய்த பருவமழையில் குரோம்பேட்டை, பல்லாவரம், ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி, பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மழை நீர் தேங்கியதற்கு, அப்பகுதியில் உள்ள மூன்று மழை நீர் வடிகால்கள், கால்வாய் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு தான் காரணம். இதுகுறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானது. வடிகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, ஆக.,1ல், செங்கல்பட்டு கலெக்டர், தமிழக தலைமை செயலர், நீர்வளத்துறை செயலர் ஆகியோருக்கு அளித்த மனுவை பரிசீலித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஒய்.கவிதா ஆஜராகி, ''ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தாசில்தார், வி.ஏ.ஓ., உள்ளிட்டோர் உறுதி செய்தும், இதுவரை 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை,'' என்றார். தமிழக அரசு தரப்பில், 'இதுவரை 81 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது' என தெரிவித்து, அதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளில், வெள்ள பாதிப்புகளுக்கு காரணமான கால்வாய் ஆக்கிரமிப்புகளை, நான்கு மாதங்களுக்குள் அகற்ற உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ