உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு தாமதமானதால் ரூ.5 லட்சம் இழப்பீடு வீட்டு வசதி வாரியம் வழங்க உத்தரவு

வீடு தாமதமானதால் ரூ.5 லட்சம் இழப்பீடு வீட்டு வசதி வாரியம் வழங்க உத்தரவு

சென்னை, சோழிங்கநல்லுாரில், வீட்டுவசதி வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில், உயர் வருவாய் பிரிவில், 31.78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்க, வி.சேஷாச்சலம் என்பவர், 2011ல் விண்ணப்பித்தார்.இதன்படி, அவருக்கு, அதே ஆண்டில் வீடு ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முடித்து, 24 மாதங்களில் வீட்டை ஒப்படைப்பதாக, வீட்டு வசதி வாரியம் உறுதி அளித்திருந்தது.இதில், வீடு வாங்குவதற்கு பணம் செலுத்திய சேஷாச்சலம் இறந்துவிட்டார். இதையடுத்து, வீட்டுக்கான எஞ்சிய தவணை தொகையை, அவரது மனைவி வசந்தா செலுத்தி வந்துள்ளார்.ஆனால், குறிப்பிட்ட கால வரம்புக்குள், அவருக்கு வீடு ஒப்படைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தாமத காலத்துக்கு வாரியம் ஒப்புக்கொண்டிருந்த இழப்பீடும், அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதில் மிக தாமதமாக, 2020ல் வீட்டை வாரிய அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதற்கான பத்திரப்பதிவு, 2021ல் மேற்கொள்ளப்பட்டது.இது குறித்த வழக்கில் ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் என். உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில், ஒதுக்கீட்டின்போது தெரிவித்த கால கெடுவுக்குள் வாரியம் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. இத்துடன் அளித்த உறுதிமொழியும் மீறப்பட்டுள்ளது.எனவே, வீடு ஒப்படைப்பு தாமதமானதால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாயை, வீட்டு வசதி வாரியம் வழங்க வேண்டும். மேலும், வழக்கு செலவுக்காக, 1 லட்சம் ரூபாயையும் வாரியம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ