சென்னை : சென்னையில் நீண்ட காலமாக அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து வசிப்போர் பயனடைய, 3.90 லட்சம் சதுர அடி நிலத்திற்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கலாம் என, மாநகராட்சி தடையின்மை சான்று வழங்கி, பச்சைக்கொடி காட்டியுள்ளது.சென்னை மாநகராட்சி எல்லையில், வண்டிப்பாட்டை, களம், மயானம் உள்ளிட்ட வகைப்பாடு உடைய இடங்களில், பலர் வசிக்கின்றனர்.அரசு புறம்போக்கு இடங்களான இவற்றில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்போருக்கு, ஒருமுறை வரன்முறை செய்யும் சிறப்பு திட்டத்தின் கீழ், வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சர்வே எண்களிலும், பல ஏக்கர் இடங்கள் உள்ளன. இதில், குறிப்பிட்ட பகுதியில் வசிப்போருக்கு பட்டா வழங்க, வருவாய் துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, சென்னை மாநகராட்சியிடம் தடையின்மை சான்று கேட்டு, சென்னை மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதினார். மாநகராட்சியின் நிலம் மற்றும் உடைமைத்துறை, அந்தந்த தாலுகா வாயிலாக, இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அளவீடு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, 65 இடங்களில், 98 சர்வே எண்களில் அடையாளம் காணப்பட்ட, 3.90 லட்சம் சதுர அடி இடத்தில் வீடு கட்டி வசிப்போருக்கு, பட்டா வழங்க தடையில்லை என, மாநகராட்சி சான்று வழங்க முடிவு செய்தது. நிலைக்குழுவில் அனுமதி பெற்று, மன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து, 98 சர்வே எண்களில் உள்ள கோப்புகளை தயார் செய்து, 'பட்டா வழங்க தடையில்லை' என, சென்னை கலெக்டருக்கு தடையின்மை சான்று அனுப்பப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, மாவட்ட வருவாய் துறை சார்பில் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, ஓரிரு மாதங்களில், 3.90 லட்சம் சதுர அடி இடங்களை ஆக்கிரமித்துள்ளோருக்கு வசதியாக, அவர்கள் வசிக்கும் நிலங்களை சொந்தமாக்கும் வகையில், வீட்டு மனை பட்டா வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லுார் தாலுகாவில், 1.48 லட்சம் சதுர அடி பரப்புக்கு, பட்டா வழங்கப்பட உள்ளது.மாநகராட்சியின் இந்த முடிவால் ஆக்கிரமிப்பாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பட்டா கிடைப்பதால் முறைப்படி கட்டுமான திட்டங்களை மேற்கொள்ளலாம்; எளிதாக வங்கி கடன் வசதியையும் பெற முடியும். நிலத்தின் மதிப்பும் அதிகரிக்கும் என்பதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில், 2 சென்ட் நிலத்திற்கு இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்கப்படும். அதற்கு மேலான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால், வழிகாட்டி மதிப்பில் நான்கில் ஒரு பங்கு பணம் செலுத்த வேண்டும். அவர்களின் ஆண்டு வருமானது ஐந்து லட்சம் ரூபாய்க்குள் இருப்பது அவசியம்.
பகுதிகள்?
மாதவரம், மதுரவாயல், போரூர், அத்திப்பட்டு, பாடி, நொளம்பூர், நெற்குன்றம், ராமாபுரம், காரம்பாக்கம், புழல், மாத்துார், சடையன்குப்பம், கடப்பாக்கம், கொரட்டூர், நுங்கம்பாக்கம், எழும்பூர், பட்டரைவாக்கம், அம்பத்துார், கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், முகலிவாக்கம், ராமாபுரம், சைதாப்பேட்டை, மதனந்தபுரம், ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, ஜல்லடையான்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட, 65 பகுதிகளைச் சேர்ந்த, 98 சர்வே எண்களுக்கு பட்டா வழங்க தடையில்லை என, மாநகராட்சி சான்று அளித்துள்ளது.