ஐ.சி.எப்., - எஸ்.டி.ஏ.டி., அணிகள் வாலிபாலில் அரையிறுதிக்கு தகுதி
சென்னை, மாநில அளவில் நடக்கும் சீனியர் வாலிபால் போட்டியின் மகளிர் பிரிவில், ஐ.சி.எப்., மற்றும் எஸ்.டி.ஏ.டி., மகளிர் அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றன.தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில், மாநில அளவில் இருபாலருக்கான சீனியர் 71வது வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர், சென்னையில் நடக்கிறது. 24 அணிகள் மோதுகின்றன.இதன் மகளிர் பிரிவு காலிறுதி இரண்டாவது நாள் போட்டி, நேற்று முன்தினம் நடந்தது. முதல் காலிறுதியில் ஐ.சி.எப்., அணி, கிறிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் சென்னை அணியை எதிர்த்து மோதியது.இதில் ஐ.சி.எப்., அணி 25 - 11, 25 - 11, 25 - 18 என்ற செட் கணக்கில், எதிர்த்து விளையாடிய கிறிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் அணியை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.இரண்டாவது போட்டியில், எஸ்.டி.ஏ.டி., மகளிர் அணி, மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணியை எதிர்கொண்டது. 75 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில், எஸ்.டி.ஏ.டி., மகளிர் அணி 25 - 16, 25 - 12, 25 - 14 என்ற செட் கணக்கில் மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.