6 மாதங்களில் பல்லிளித்த சாலை திருமுல்லைவாயிலில் அவஸ்தை
ஆவடி,ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் எட்டாவது வார்டு, மணலோடை பிரதான சாலையில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.இங்கு, 25 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல், மண் சாலையில் அப்பகுதிவாசிகள் அவதி அடைந்தனர்.இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், தார் சாலை போடப்பட்டது. இந்த சாலையை, பகுதிவாசிகள் மட்டுமின்றி, அம்பத்துார், ஒரகடம் வழியாக புழல், செங்குன்றம் செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, புதிதாக சாலை போடப்பட்டதால், வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சில வாரங்களாக பெய்து வரும் மழையால், பல இடங்களில் சாலை சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறி வருகிறது. இதனால், பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக, சாலை அமைத்து ஆறு மாதங்களில், சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், பெரிய பள்ளங்கள் ஏற்படுவதற்கு முன், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.