அதிகரிப்பு! * மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு... * கண்காணிப்பு வளையத்தில் சென்னை மாநகரம்
சென்னை, மே 10-இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதான இடங்களில் உளவுத்துறையும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.இந்தியா -- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்துாரை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான் நடத்தும் வான்வழித் தாக்குதல்களை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.அதே நேரம், பாகிஸ்தான் ராணுவம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பிரதான நகரங்களுக்கு பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, நாடு முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.குறிப்பாக, கடற்கரை, வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள், பேருந்து நிலையங்கள் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில், வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, தங்கும் விடுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்காக, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 8,000 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஊர்க்காவல் படையினர் 1,000 பேரும், போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்த ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழாவில், இது குறித்து போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது:இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நம் நாட்டை காப்பாற்ற வீரத்தோடும், தீரத்தோடும் போர் புரிந்துக் கொண்டிருக்கிற நம் முப்படையினருக்கும் ஆதரவையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.போர் பதற்றம் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். உளவுத்துறை, நுண்ணறிவு பிரிவு போலீசாரும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
ஊர்காவல் படையினருக்கு
கமிஷனர் அருண் பரிசுதானத்தில் நேற்று, 514 ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் அருண் பயிற்சியில் சிறந்து விளங்கிய, 11 ஊர்க்காவல் படையினருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் கமிஷனர் அருண் பேசியதாவது : ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு காவல் துறைக்கு நிகராகவே இருந்தது. தமிழ்நாடு ஊர்க்காவல் படை, 1963ம் ஆண்டு துவங்கப்பட்டது. காவல் துறையுடன் சிவில் பாதுகாப்பு பணியில் ஒருங்கிணைந்து மக்களின் பாதுகாப்பிற்கு பெரிதும் பங்காற்றி வருகின்றனர்.சென்னையில், ஊர்க்காவல் படையில் மொத்தம், 2,068 பேர் பணியாற்றி வந்தனர். இதில் ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, 750 ஊர்க்காவல் படையினர் கொடுக்கப்பட்டனர். அதன்பின், 2024ம் ஆண்டிற்கான காவலர் மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர ஊர்க்காவல் படைக்கு கூடுதலாக, 500 பேர் பணி அமர்த்தப்படுவர் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிதாக, 514 ஊர்க்காவல் படையினர் தகுதியின் படி தேர்வு செய்யப்பட்டனர்.இவ்வாறு அவர் பேசினார்.