காசிமேடில் சிறிய ரக மீன் வரத்து அதிகரிப்பு; விலை சரிவால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி
காசிமேடு; காசிமேடில், சிறிய ரக மீன் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து விற்பனையானது. இதனால், மகிழ்ச்சியடைந்த மீன் பிரியர்கள் கிலோ கணக்கில் வாங்கி சென்றனர். வரும் புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற 60க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர். படகுகளில் பெரிய மீன்கள் வரத்து அதிகம் இல்லை. அதேநேரம் சிறிய ரக மீன்களான கிளிச்சை, கவளை, வாலை, கானாங்கத்தை, கடம்பா உள்ளிட்ட சிறியரக மீன் வகைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே, மக்கள் கூட்டமும் அலைமோதியது. சிறிய ரக மீன் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து விற்பனையானது. மீன் பிரியர்கள் கிலோ கணக்கில் வாங்கி சென்றனர். ஆனால், எதிர்பார்த்த விலை கிடைக்காததால், விசை படகு உரிமையாளர்கள் நஷ்டமடைந்ததாக தெரிவித்தனர். வியாபாரிகள் வேதனை இது குறித்து விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் கூறியதாவது: என் விசைப்படகில், 150 கூடை கிளிச்சை, கவளை, வாலை மீன்கள் கிடைத்தன. 25 கிலோ மீன் கொண்ட ஒரு கூடை 300 ரூபாய்க்கு கூட வாங்க ஆள் இல்லை. இதனால், எண்ணெய்க்காக மட்டுமே விற்பனையானது. காசிமேடு துறைமுகத்தில், ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மீன் ஏலத்திற்கு வரும் நிலையில், கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து, சிந்தாதிரிப்பேட்டை, காவாங்கரை, வானகரம் மீன் சந்தைகளுக்கு, அதிகளவில் மீன் விற்பனைக்கு வருகிறது. இதனால், காசிமேடிற்கு வரும் மீன் வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது, 200க்கும் உட்பட்ட வியாபாரிகள் மட்டுமே வருகின்றனர். இதனால் காசிமேடு சந்தையில் மீன் விற்பனை குறைந்துள்ளது. விசைப் படகு உரிமையாளர்களுக்கு, ஒரு படக்கிற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறு கூறினர். மீன் விலை நிலவரம்
வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 900 - 1,000 சின்ன கருப்பு வவ்வால் 300 - 400 பாறை 400 - 500 கடல் விரால் 500 - 600 சங்கரா 200 - 500 தும்பிலி 150 - 200 கானாங்கத்தை 100 - 300 கடம்பா 150 - 300 நெத்திலி 200 - 400 வாளை 50 - 75 இறால் 300 - 500 டைகர் இறால் 1,200 - 1,300 நண்டு 300 - 400
களைகட்டுது கடம்பா சீசன்
சென்னையில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கடம்பா மீன் அதிகளவில் கிடைக்கும். சென்னையை பொறுத்தமட்டில் கடம்பா மீன் பிடிக்கும் மீனவர்கள் குறைவாகவே உள்ளனர். கடம்பா மீன் பிடிக்க தனி வலை உண்டு. நொச்சிக்குப்பம் பகுதியில் 30 மீனவர்களிடம் மட்டுமே, கடம்பா மீன் பிடிக்கும் வலை உள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள், இரண்டு நாட்டிகல் மைல் துாரம் வரை கடலுக்குள் சென்று, கடம்பா வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இந்த மீன்களில் கலோரி, புரதம், கொழுப்பு, ஒமேகா - 3 மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்பு, அதிக புரதம் இருப்பதால் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒமேகா - 3 கொழுப்பு அமிலமானது, இதய நோய் அபாயம் குறைக்கும். ரத்த சோகையை தடுக்கக்கூடிய வைட்டமின் பி - 12 இதில் நிறைந்துள்ளதால், மக்கள் விரும்பி உண்கின்றனர். மேலும், இதில் முள் இல்லாததால் குழந்தைகளும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது. கடம்பா மீன் சந்தையில் 1 கிலோ, 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.