உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை

கிண்டி ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை

சென்னை: கிண்டி ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தை, அரசு சுவாதீனம் எடுத்ததை எதிர்த்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள, 160.86 ஏக்கர் நிலத்தை, கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு, 99 ஆண்டுகள் குத்தகைக்கு அரசு வழங்கியது. குத்தகை பாக்கி, 730.86 கோடி ரூபாய் செலுத்தாததால், குத்தகைக்கு அளித்த, 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அரசு மீட்டது. அந்த இடத்தில், 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை துறை சார்பில் பசுமைவெளி பூங்கா; மாநகராட்சி சார்பில் மழைநீரை சேமிக்க, நான்கு குளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவற்றுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஏற்கனவே உள்ள நிலை தொடர உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு, ''தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை ரத்து செய்து, பொது நலன் கருதி திட்டங்களை மேற்கொள்ளலாம்,'' என, தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில், நிலத்தை சுவாதீனம் செய்ததை எதிர்த்து, ரேஸ் கிளப் நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க, தனி நீதிபதிக்கு தடை விதிக்க கோரி, தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபீக் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''தனி நீதிபதி முன் விசாரணையில் உள்ள வழக்கில் ஏதேனும் இறுதி தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டால், அது மேல்முறையீட்டு வழக்கை செல்லாததாக்கி விடும்,'' என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது தீர்ப்பளிக்கும் வரை, நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்ததை எதிர்த்து, ரேஸ் கிளப் நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க, தனி நீதிபதிக்கு இடைக்கால தடை விதித்தும், மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையை, நவ., 19ம் தேதிக்கும் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ