பன்னாட்டு புத்தக திருவிழா நிறைவு 1,125 ஒப்பந்தங்கள் கையெழுத்து
சென்னை, சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா, கடந்த 16ம் தேதி துவங்கியது. இதில், குழந்தைகளுக்கான மூன்று அரங்குகள் உள்ளிட்ட, 81 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.தினமும், நுால் வெளியீடுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.அதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நுால்களை வெளியிட்டார்.மேலும், 2023 - 24ம் ஆண்டுக்கான மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நுால்களையும் அவர் வெளியிட்டார். அத்துடன், பல்வேறு தலைப்புகளில் விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.முன்னதாக, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பார்லிமென்ட் எம்.பி., சசி தரூர் பேசியதாவது:இந்தப் புத்தக திருவிழாவில், 64 நாடுகளைச் சேர்ந்த பதிப்பகங்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளன.இங்கு, சமூக நீதிகுறித்து பேசுவதில் மிகவும் பெருமை அடைகிறேன். பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நுால்களை முதல்வர் வெளியிட்டுள்ளார். மற்ற நாட்டினரை நம்முடன் இணைப்பது மொழிதான்.மொழிபெயர்ப்பு என்பது, உலகளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழில் சங்க கால மொழிகளில், சமூக நீதி பேசப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் பெண்ணுரிமை குறித்து பேசப்பட்டுள்ளது. பல எழுத்தாளர்களின் படைப்புகள், சமூக நீதிக்காக போராடின. மகாபாரதம் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் திரவுபதி என்ற தலைப்பிலும் நுால் வெளியானது. அது பெண்களுக்கு ஆதரவான அத்தியாயம்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த ஆண்டு கண்காட்சியில், 1,125 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் தமிழ் மொழியில் இருந்து அயலக மொழிகளுக்கு, 1,005 ஒப்பந்தங்களும், அயலகமொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.விழாவில் தமிழக அமைச்சர்கள் அன்பரசன், மகேஸ், ராஜா, தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு, அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் ஹிடோஸி புருக்ஸ்மா, இத்தாலி பொலோனியா புக் பிளஸ் இயக்குநர் ஜாக்ஸ் தாமஸ், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் மேலாண்மை இயக்குநர் சங்கர், அதன் தலைவர் லியோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.