நமது நிருபர்
வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து, சென்னை விமான நிலையத்தை பாதுகாக்கும் வகையில், 123 கோடி ரூபாயில் துவங்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணிகள் முறையாக நடக்காமல் முடங்கியுள்ளன. இதனால், நடப்பாண்டு பருவமழைக்கு விமான நிலையம் தப்புமா; விமானங்களை தடையின்றி இயக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம், 1,376.75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மூன்று முனையங்கள் செயல்படுகின்றன. விமானங்களை இயக்க இரண்டு ஓடுபாதைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த ஓடுபாதைகள் அடையாறு ஆற்றை சுற்றி அமைக்கப்பட்டு உள்ளதால், கனமழை காலங்களில் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக, வடகிழக்கு பருவமழை காலத்தில், திரிசூலம் ஜி.எஸ்.டி., சாலை மற்றும் மீனம்பாக்கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் மொத்தமாக விமான நிலைய வளாகத்திற்குள் சூழ்ந்து விடுகிறது. இதனால், விமானங்கள் நிறுத்தும் பகுதி, ஓடுதளப் பாதை போன்ற இடங்கள் குளமாகி விடுகின்றன. இதனால், விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதோடு, விமான நிலையத்தை தற்காலிகமாக மூடும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன.இதற்கிடையில், விமான நிலைய ஓடுபாதையை சுற்றி மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள், 123 கோடி ரூபாயில், 4.3 கி.மீ., துாரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை இந்தாண்டு ஜூனில் துவக்கினர்.இந்த கால்வாய் நேரடியாக மழைநீர், அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பணிகள் துவங்கி நான்கு மாதத்தை நெருங்கியும், இதுவரை ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால், நடப்பாண்டு மழைக்கு சென்னை விமான நிலையம் தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து, விமான போக்குவரத்து வல்லுநர்கள் கூறியதாவது: சென்னை விமான நிலைய முனையம் மேம்பாட்டு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள், குறித்த நேரத்தில் எப்போதும் முடிக்கப்படுவதில்லை; ஏதாவது ஒரு காரணங்களால் தள்ளிக் கொண்டே போகின்றன.வடகிழக்கு பருவ மழைக்காலமாக நவம்பர், டிசம்பரில் விமான சேவை முடங்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு விமான நிலைய ஆணைய அதிகாரிகள், மாநில அரசுடன் இணைந்து புது திட்டங்களை வகுக்கலாம். இதற்கென தனி குழுவை அமைத்து, நிரந்தர தீர்வு காணலாம்.மழைக்கு ஓரிரு மாதங்களுக்கு முன் பணிகளை துவங்குவது, நாங்களும் முயற்சி மேற்கொண்டோம் என கணக்கு காட்டும் செயல். அதுபோன்று தான் வடிகால்வாய் பணியை துவக்கியுள்ளனர். மழைக்காலத்தில் விமான சேவை முடங்கும் நிலை தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சவால் நிறைந்த பணி
விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'ஓடுபாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் வடிகால்வாய் பணிகள் மெதுவாகத்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராட்சத 'கிரேன்' உதவியுடன் உபகரணங்களை விமான நிலையத்திற்குள் எடுத்துச் செல்ல வேண்டும். விமான இயக்கங்கள் அதிகம் என்பதால், நினைத்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ள முடியாது. இருப்பினும் பணிகளை வேகப்படுத்தி வருகிறோம்' என்றனர்.
அரைகுறை பணிகளை செய்ததா நீர்வளத்துறை?
கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட 'மிக்ஜாம்' புயலால் கனமழை கொட்டியது. நந்தம்பாக்கம் தடுப்பணையை கடந்து, வினாடிக்கு 44,452 கன அடி நீர் வெளியேறியது. சென்னை விமான நிலைய ஓடுபாதையிலும் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. வெள்ள சேதத்தை தவிர்க்க, அடையாறு ஆற்றின் கரையில் 770 மீட்டர் வெள்ளத் தடுப்பு சுவர், மூன்று இடங்களில் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட திட்டமிடப்பட்டது. வெள்ளநீர் செல்ல வசதியாக, ஆற்றின் இடது கரையில் 4,200 மீட்டர், வலது கரையில் 1,600 மீட்டர் துாரம் பலப்படுத்த முடிவானது. இதற்காக, 24.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன. இந்த பணிகள் கடந்தாண்டில் முடிந்ததாக கணக்கு காட்டினாலும், அரைகுறை வேலைகள் நடந்ததால், மீண்டும் ஆற்றங்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வரும் மழைக்காலத்திலும் விமான ஓடுபாதை வெள்ளத்தில் மூழ்கும் சூழல் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.