உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கள்ளழகர் வருகையால் மேடையில் விழாக்கோலம்

கள்ளழகர் வருகையால் மேடையில் விழாக்கோலம்

திருமாலின் திருபூஞ்சோலை யை புஷ்பாஞ்சலியால் காட்ட, தி.நகர் வாணி மஹால் அரங்கில் நுழைந்தனர், ஜெயந்தி சுப்பிரமணியம் மற்றும் அவரது குழுவினர்.புஷ்பாஞ்சலியில் திருமலையின் அழகையும், அங்கு வாழும் உயிரினங்களையும் அழகாக, நடனத்தில் வர்ணித்தனர்.மாயாவிகள் 18 பேர், கருப்பு நிற முகமூடியோடு பட்டர் கனவில் வந்து, அவரை பயமுறுத்துகின்றனர். இதை, மன்னரிடம் பட்டர் எடுத்துரைக்க, சுடுகஞ்சியின் ஆவியால் அந்த திருட்டு மாயாவிகள் பிடிபடுகின்றனர்.தங்களுக்கு கருணை வேண்டி, அந்த மாயாவிகள் மன்னனிடம் கேட்கின்றனர். அவர்கள், கோவில் படிக்கட்டுகளாக மாற்றப்பட்டு, கருப்பண்ணசாமிக்கு காவலாக வீற்றிருக்கும் கதையை, உறுமி முழங்க, கொண்டாட்டத்துடன் நடனத்தில் நிகழ்த்தினர்.ஆண்கள் ஒயிலாட்டமும், பாவாடை தாவணியில் பெண்களின் கும்மியாட்டமும், நையாண்டி மேளத்துடன் கரகாட்டமும் என, விழாக்கோலம் பூண்ட அய்யன் வர்றார் என, மேடையில் வரவேற்றனர்.குதிரை, யானை வாகனங்களும், தவில் நாதஸ்வர மேளதாளங்களும், கொடியும் குடையும், சாமரமும் என, கள்ளழகர் பவனி வருவதை ஆண்டாள் கூற, மறுபுறம் அழகாய் மல்லாரி வடிவில், குழுவினர் காட்டினர்.அடுத்தக்கதையாக, கண் பார்வையற்ற தன் அடியாருக்கு, நேரில் வந்து தொட்டு உணர வைத்த கதையை, நாட்டிய குழுவினர் விளக்க ஆரம்பித்தனர்.அந்த அடியாரான கூரத்தாழ்வார், தன் மனதிலும் நினைப்பிலும் கண்ணின் நினைப்பில் திழைக்கிறார். கண்ணனை, தாய் அலங்கரித்து விளையாடுவதும், கண்ணனின் காலிங்க நர்த்தனத்தையும் வெண்ணெய் திருடி விளையாடுவது உள்ளிட்ட நிகழ்வுகளை காட்டியவிதம், மெய் சிலிர்க்க வைத்தது.தொடர்ந்து தங்க குதிரையில் அழகர் பவனியை நடன மங்கைகள் விவரிக்க, சப்பு சத்தமும், அந்த சந்தி பாடலோடு ஆற்றில் இறங்க, கோலாகலமாக புறப்பட்டார்.கோவிந்தா, கோவிந்தா என, நீரை ஊற்றி மகிழ்ந்து, அனைவரும் பக்தியை வெளிப்படுத்த, அங்கு தவளையாக இருந்தவர் பாவ விமோசனம் பெற்ற கதையையும் அழகாக காட்டினார்.தச அவதாரங்கைளையும் தில்லானா உருப்படியோடு மேடையில் ஒன்றிணைத்துக் காட்டினர். அழகரான அரங்கன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக வீற்றிருக்க, திருப்பாவை பாடலோடு, ராஜ்குமார் பாரதி இசையில் ஜெயந்தி சுப்ரமணியம், அவரது குழுவினர், நிகழ்ச்சியை பக்தியுடன் நிறைவு செய்தனர்.-மா.அன்புக்கரசி,மாணவி, தமிழ்நாடு கவின் கலை மற்றும் இசை பல்கலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி