மகிழ்ச்சி துள்ளலுடன் மழலையர் பங்கேற்பில் அனா... ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம்
சென்னை:பெற் ற ோருடன் 1,500க்கும் மேற்பட்ட மழலையர் பங்கேற்பில், 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் வேலம்மாள், 'நியூ ஜென் கிட்ஸ்' சார்பில், 'அரிச்சுவடி ஆரம்பம்' என்ற 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, விஜயதசமி நன்னாளான நேற்று இனிதே நடந்தது. குழந்தைகளின் கல்வி கண் திறக்கும் நிகழ்ச்சியை, 'வித்யாரம்பம்' என்பர். இதை, சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமி நன்னாளில் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று, நம் நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் வேலம்மாள், 'நியூ ஜென் கிட்ஸ்' சார்பில், ஐந்து இடங்களில் பல்துறை வல்லுநர்கள், நெல் மணிகள் நிரம்பிய தாம்பூலத்தில், 2.5 முதல் 3.5 வயதுடைய குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து, 'அ'னா, 'ஆ'வன்னா எனும் அகரத்தை எழுதி, அரிச்சுவடியை ஆரம்பித்து வைத்தனர்.