சென்னை, மடிப்பாக்கம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம். ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறந்த இவர் காலமாகிவிட்டார்.இவரது மனைவி மீனா, 75. இவர்களது இளைய மகன் பாலாஜி, 49; ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். இவர், தந்தை ஞானசுந்தரத்துடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரிப்பு, நில மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், 2005ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.ஜாமினில் வெளிவந்த பின், பாலாஜி மீண்டும் மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். சில ஆண்டுகளுக்கு முன், சைதாப்பேட்டையைச் சேர்ந்த குளிர்சாதன பெட்டி விற்பனையில் ஈடுபட்டு வரும் தொழில் அதிபர் டேனியல் சாமுவேல், 69, என்பவரிடம், பாலாஜி, இவரது தாய் மீனா, மனைவி அம்ருத் ஆகியோர், 1.20 கோடி ரூபாய் கடன் வாங்கினர். 15 நாட்களுக்குள் அந்த பணத்தில், 1.15 கோடி ரூபாயை திருப்பி கொடுத்தனர். இதனால், மூவர் மீதும் நம்பிக்கை ஏற்பட்டது.நிலம் வாங்க வேண்டும் என, மீண்டும் 2.85 கோடி ரூபாய் வாங்கினர். காலம் தாழ்த்தி வந்ததுடன் அந்த பணத்தை திரும்ப தரும் வரை, 16 வகையான சொத்து ஆவணங்களை அடமானமாக வைத்துக் கொள்ளுமாறு ஒப்படைத்தனர்.ஆனால், மூவரும் தன்னிடம் கொடுத்த அசல் ஆவணங்களுக்கு பதிலாக, போலி ஆவணங்கள் தயாரித்து நிலங்களை வேறு சிலருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இது குறித்து, டேனியல் சாமுவேல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.அப்போது, டேனியல் சாமுவேலுவிடம் ஒப்படைத்த ஆவணங்கள் தொலைந்துபோய் விட்டதாக பொய் புகார் அளித்து, ஆந்திர மாநிலம், சித்துார் காவல் நிலையம் வாயிலாக தடையின்மை சான்று வாங்கி உள்ளனர்.அதன் வாயிலாக, டேனியல் சாமுவேல் வசம் உள்ள அசல் ஆவணங்களுக்கு பதிலாக போலி ஆவணங்கள் தயாரித்து, நிலத்தை வேறு சிலருக்கு விற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததும், இதற்கு மீனா, அம்ருத் உடந்தையாக இருந்தும் தெரியவந்தது.பாலாஜியை பிடித்து விசாரித்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மீனா மற்றும் அம்ருத் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.