உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீதிமன்ற உத்தரவால் வேளச்சேரியில் மீட்கப்பட்ட இடம் மீண்டும் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் அலட்சியத்தால் வெள்ள பாதிப்பு அபாயம்

நீதிமன்ற உத்தரவால் வேளச்சேரியில் மீட்கப்பட்ட இடம் மீண்டும் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் அலட்சியத்தால் வெள்ள பாதிப்பு அபாயம்

சென்னை, ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த நீர்வழிப்பாதை மீட்கப்பட்ட நிலையில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை ஒரு கும்பல் மீண்டும் ஆக்கிரமித்து, மண் கொட்டி, கட்டடம் கட்டி வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்றாமல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதால், மழைநீர் செல்வதில் தடை ஏற்பட்டு, வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என, குடியிருப்போர் நல சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். சோழிங்கநல்லுார் தாலுகாவுக்கு உட்பட்ட, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 1,630 ஏக்கர் பரப்பு உடையது. இதையொட்டி, 200 ஏக்கர் அரசு இடம் உள்ளது. இந்த இடத்தில் இருந்து, வேளச்சேரி தாலுகா துவங்குகிறது. இதில், வேளச்சேரி தாலுகா சர்வே எண்ணில் உள்ள உட்பிரிவை, சோழிங்கநல்லுார் தாலுகாவுக்கு உட்பட்ட சதுப்பு நிலத்திற்கு போலியாக பயன்படுத்தி, ஒரு கும்பல் அந்த நிலத்தை ஆக்கிரமித்தது. இதில், 10 ஏக்கருக்கு மேல் நிலம் மட்டும், நீதிமன்ற உத்தரவையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன் அரசால் மீட்கப்பட்டது. 'நோட்டீஸ்' இந்நிலையில், சதுப்பு நிலத்திற்கு செல்லும் நீர்வழிபாதையை சிலர் மீண்டும் ஆக்கிரமித்ததால், வேளச்சேரி டான்சிநகர் நலச்சங்கத்தினர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றத்தில், 15 கோடி ரூபாய் மதிப்புடைய, 5 கிரவுண்ட் இடம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவையடுத்து, சோழிங்கநல்லுார் தாசில்தார் சார்பில், 120க்கும் மேற்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு, கடந்த ஜூன் மாதம், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஒரு மருத்துவமனைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லுார் தாசில்தார்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மீட்கப்பட்ட நீர்வழித்தடத்தில் மீண்டும் மண் கொண்டி நிரப்பி, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து, வேளச் சேரி பகுதி நலச்சங்கத்தினர், மாநகராட்சி, வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கட்டுமான பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து, வேளச்சேரி டான்சிநகர் நலச்சங்க செயலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரோட்ட பாதையை சீரமைக்க வேண்டும் என, சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் உத்தரவையடுத்து, சோழிங்கநல்லுார் வருவாய் துறை, ஆக்கிரமிப்பு இடங்களை எல்லை நிர்ணயம் செய்து, 'நோட்டீஸ்' வழங்கியது. அதன் பின் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறியது, நீரோட்ட பாதை அமைக்காதது, மீண்டும் ஆக்கிரமித்ததை தடுக்காதது குறித்து, மாநகராட்சி, வருவாய் துறை மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளோம். மூழ்கும் ஆக்கிரமிப்பை தடுக்கா விட்டால், வேளச்சேரி மீண்டும் வெள்ளத்தில் மூழ்குவது நிச்சயம். இதற்கு அதிகாரிகள் தான் முக்கிய காரணமாக இருப்பர். இவ்வாறு அவர் கூறினார். வேளச்சேரி அன்னை இந்திரா நகர் நலவாழ்வு சங்க தலைவர் குமாரராஜா கூறியதாவது: நீர்வழிப்பாதை பகுதியை மீட்பதில், மாநகராட்சி, வருவாய்த் துறை இடையே ஒற்றுமை இல்லை. ஆக்கிரமிப்புக்கு உள்ளான இடம், ரயில்வே வழங்கிய பகுதியாக இருந்தாலும், பராமரிப்புக்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில், குளம், சாலை, வடிகால்வாய் அமைத்துள்ளனர். இதில் ஆக்கிரமிப்பு முளைத்தால், மாநகராட்சி, வருவாய் துறை சேர்ந்து தடுக்க வேண்டும். இரு துறைகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி தப்பித்து கொள்கின்றனர். இது ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக இருக்கிறது. வேளச்சேரி வெள்ள பாதிப்பை தடுக்க, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி தடுத்திருக்கணும்!

சோழிங்கநல்லுார் மற்றும் வேளச்சேரி தாலுகா அதிகாரிகள் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்பேரில், நோட்டீஸ் வழங்கிய கட்டடங்களை இடிக்க, கலெக்டர் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். நீர்வழிதடத்தில் மண் கொட்டி கட்டடம் கட்டுவதை, மாநகராட்சிதான் தடுத்திருக்க வேண்டும். எங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. கள ஆய்வு செய்ததில், ஆக்கிரமிப்பு செய்வது தெரிந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை