உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓய்வு அதிகாரி வீட்டில் புகுந்து சூறையாடிய வக்கீல் சிக்கினார்

ஓய்வு அதிகாரி வீட்டில் புகுந்து சூறையாடிய வக்கீல் சிக்கினார்

கோயம்பேடு:ஓய்வுபெற்ற வணிகவரித் துறை அதிகாரியின் வீட்டை சூறையாடிய, வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு, ரத்தினபுரி 5வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம், 75; ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரி. தற்போது ஆன்மிக சொற்பொழிவாற்றி வருகிறார். இவர், சரவணகுமார் என்பவர் வீட்டில், கடந்த மார்ச் மாதம் முதல் ஓராண்டு ஒப்பந்தத்தில், 16,000 ரூபாய் வாடகைக்கு குடியிருந்தார். சில மாதங்களுக்கு முன், வீட்டை காலி செய்யும்படி சண்முகத்திடம் சரவணகுமார் கூறியுள்ளார். அதற்கு சண்முகம் அவகாசம் கேட்டுள்ளார். காலம் கடத்துவதாக ஆத்திரமடைந்த சரவணகுமார், கடந்த 23ம் தேதி கொடுங்கையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திருஞானம், 45, உள்ளிட்ட ஐந்து வழக்கறிஞர்கள் மற்றும் ஐந்து திருநங்கையருடன், சண்முகத்தின் வீட்டிற்கு சென்று ரகளை செய்துள்ளார். மேலும், சண்முகத்தின் மனைவி, மகன், மகள் என, அனைவரையும் தாக்கி, வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடி உள்ளனர். இது குறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, ஏற்கனவே சரவணகுமாரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்த நிலையில், பாடி மேம்பாலம் அருகே நேற்று மதியம் திருஞானத்தை கைது செய்தனர். விசாரணையில், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள திருஞானம், கொலை உள்ளிட்ட 15 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை