உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அலுவலர்கள் மெத்தனப்போக்கு: ஆலந்துார் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

அலுவலர்கள் மெத்தனப்போக்கு: ஆலந்துார் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

ஆலந்துார், 'மாநகராட்சி, குடிநீர், மின் வாரிய அலுவலர்கள் மிக மெத்தனமாக செயல்படுவதால், வார்டுகளில் எந்த பணிகளும் நடப்பதில்லை' என, ஆலந்துர் மண்டல குழு கூட்டத்தில், கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மண்டல உதவிக் கமிஷனர் ஸ்ரீனிவாசன், பல துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:பூங்கொடி - தி.மு.க., - 163வது வார்டு: நியூகாலனி பகுதியில் சாலை சீரமைக்க வேண்டும். கட்டி முடித்து நீண்ட நாட்களாக திறக்கப்படாத பாலகிருஷ்ணபுரம் ரேஷன் கடையை திறக்க வேண்டும். சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.ரேணுகா - தி.மு.க., - 161வது வார்டு: வார்டில் நாய்கள் அதிகரித்து விட்டன. இரவு நேரத்தில் பலரை கடித்துள்ளன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.அமுதபிரியா - தி.மு.க., - 159வது வார்டு: சுடுகாட்டு கதவு பழுதடைந்து பல மாதங்கள் ஆகின்றன. மாநகராட்சி அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மகளிர் உடற்பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.தேவி - தி.மு.க., - 164வது வார்டு: குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்கு கொண்டு வரப்படும் நாய்கள் அனைத்தையும், இங்கேயே விட்டுவிடுவதால், வார்டு முழுதும் நாய்கள் அதிகரித்து பிரச்னை ஏற்படுகிறது.உஷாராணி - அ.தி.மு.க., - 157வது வார்டு: வார்டில் இரண்டு மாதமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வருகிறது. வாரிய அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பொதுக் கழிப்பறைகள் பராமரிக்கப்படுவதில்லை.சாலமோன் - தி.மு.க., - 162வது வார்டு: மாரீசன் ஆறாவது தெருவில், தனியார் ஒருவர் பல நுாறு கிலோ குப்பை சேகரித்து, அகற்ற சென்றால் அதிகாரிகள் தடுக்கின்றனர். விடுபட்ட வடிகால்வாய் பணிகள் முடிக்க வேண்டும். கவுன்சிலர்களை அலுவலர்கள் மதிப்பதில்லை.பிருந்தாஸ்ரீ - தி.மு.க., - 160வது வார்டு: வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை. அலுவலர்களிடம் கூறிய எந்த பணியையும் தீர்மானமாக கொண்டுவரவில்லை. கவுன்சிலர்களை, மாநகராட்சி அலுவலர்கள் மதிப்பதே இல்லை. அவர்கள் ஏரியாவில் தலையை காட்டிவிட்டு, சொந்தவேலை பார்க்க செல்கின்றனர். பாரதி - தி.மு.க., - 158வது வார்டு: ஆற்காடுபேட்டை சாலை கல்வெட்டு பணியை துவக்கும்படி பல மாதங்களுக்கு முன் கூறியும் இன்னும் துவக்கவில்லை. மின்கம்பங்களை மாற்றாமல் அலுவலர்கள் மெத்தனமாக உள்ளனர்.செல்வேந்திரன் - தி.மு.க., - 156வது வார்டு: சாலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை வைத்து, ஆறு மாதங்களாக அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. புதிதாக போடப்பட்ட சாலை பள்ளாங்குழிகளாக காட்சியளிக்கின்றன. பூங்காக்களை பராமரிப்பதில்லை. துர்காதேவி - தி.மு.க., - 167வது வார்டு: எஸ்.பி.ஐ., காலனி பகுதியில், மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இரண்டு பூங்காக்களில் மின்மோட்டார் பழுதடைந்துள்ளது சீரமைக்க வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

குடிநீர் வாரியம் அலட்சியம்

கவுன்சிலர்களுக்கு பதிலளித்து, மண்டல குழு தலைவர் சந்திரன் பேசியதாவது: மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் ஒரே புகார்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். மாநகராட்சி, மின்வாரியம், குடிநீர் வாரிய அலுவலர்கள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருவதாக கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் கூறுகின்றனர்.அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் நடப்பது நல்லதல்ல. அனைத்து துறை அலுவலர்களும், கவுன்சிலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். மண்டலம் முழுதும் குடிநீர் வாரியத்தின் பிரச்னை உள்ளது. இதில், தனி கவனம் செலுத்த வேண்டும். நங்கநல்லுார், நான்காவது பிரதான சாலையில், சாலையோர வர்த்தக தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தாலும், ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை