நாய் குட்டிகளை போராடி மீட்ட பகுதிவாசிகள்
ஆவடி, திருமுல்லைவாயல், பாரதி நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரது மனைவி அஸ்வினி. இவர்களது வீட்டின் அருகே, சாலையில் சுற்றித்திரிந்த பெண் நாய், சமீபத்தில் ஐந்து குட்டிகளை ஈன்றது.அவை, அங்கிருந்த 3 அடி மழைநீர் வடிகாலுக்குள் விழுந்தது. சுபாஷ் மற்றும் அஸ்வினி, தாய் நாயின் அழுகுரலை கேட்டு, நேற்று நள்ளிரவு சென்று பார்த்தபோது, நாய் குட்டிகள் உயிருக்கு போராடியுள்ளன. உடனே சுபாஷ் சந்திரபோஸ், பகுதிவாசிகள் உதவியுடன் 'ட்ரில்லிங்' மிஷின் உதவியுடன் வடிகாலில் அமைக்கப்பட்டிருந்த வீட்டின் 'ரேம்ப்'பை உடைத்து, குட்டிகளை மீட்கும் பணியில் இறங்கினர்.இதை கண்ட தாய் நாய், குட்டிகளை காப்பாற்ற அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் குட்டிகளை, அங்கிருந்தவர்கள் மீட்டனர். இதில், மூச்சுத்திணறல் காரணமாக, ஒரு குட்டி நாய் இறந்துவிட, மற்றவை பத்திரமாக மிட்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டன.கண்கள் கூட திறக்காத தன் குட்டிகளை, தாய் நாய் வாயில் கவ்வி சென்றது. நாய் குட்டிகளை காப்பாற்ற அப்பகுதிவாசிகள் ஒன்றிணைந்து, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.