லண்டன் - சென்னை விமானத்தில் திடீர் கோளாறு அவசரகதியில் தரையிறக்கம்; இரண்டு சேவை ரத்து
சென்னை, சென்னையில் இருந்து லண்டனுக்குல 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமான நிறுவனம் தினசரி விமானங்களை இயக்கி வருகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்வோர், இதில் அதிகமாக பயணிப்பர். தினசரி லண்டனில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3:30 மணிக்கு, சென்னை வந்தடையும்.பின், இங்கிருந்து 5:35 மணிக்கு லண்டன் புறப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லண்டனில் 360 பயணியருடன், விமானம் சென்னைக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து பறக்க துவங்கிய விமானம், 12,000 அடிக்கு சென்றது. சிறிது நேரத்தில், விமான கட்டமைப்பில் 'ப்ளாப்' எனும் பிரதான பகுதியில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விமானிகள், சரி செய்ய முயன்றும் முடியவில்லை. இது குறித்து, ஹீத்ரோ விமான நிலையத்தின் தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக தரையிறக்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து விமானத்தில் இருந்த எரிபொருளை வெளியேற்றிய விமானிகள், ஹீத்ரோ விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர். இதன் காரணமாக, நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, சென்னைக்கு வர வேண்டிய விமானம், இங்கிருந்து புறப்பட வேண்டிய விமானம் என, இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.இதனால், சென்னைக்கு வரவேண்டிய மற்றும் லண்டனுக்கு புறப்பட வேண்டிய 700க்கும் மேற்பட்ட பயணியர் வேறுவழியின்றி தவித்தனர். ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்துக்கு பின், ஒவ்வொரு விமான நகர்வுகளைளும் தீவிரப்படுத்தப்பட்டு, பிரச்சனைகள் இருந்தால் முழுதும் சரிசெய்த பின்னரே இயக்கப்பட்டு வருவதாக, விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
விமானத்தில் 'ப்ளாப்' என்றால் என்ன?
விமானத்தில் உள்ள பிரதான கட்டமைப்பாக 'ப்ளாப்' உள்ளது. இது, விமானத்தின் சிறகுகளின் பின்புறத்தில் காணப்படும் ஒரு பாகம் ஆகும். இவை விமானம் தரையிறங்கும்போதும், புறப்படும்போதும் விமானத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், உயரத்தைக் கூட்டவும், இறக்கையின் விளிம்புகளில் அமைக்கப்படும் பகுதிகளாகும்.