வண்டலுார் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
தாம்பரம்: வண்டலுார் உயிரியல் பூங்காவில், உடல்நல குறைவு காரணமாக, 'ராகவ்' என்ற ஆண் சிங்கம் உயிரிழந்தது. வண்டலுார் உயிரியல் பூங்காவில், 1,500க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், பூங்கா பார்வையாளர்கள் பகுதியில் விடப்பட்டிருந்த, 'ராகவ்' என்ற ஆண் சிங்கம், சில நாட்களுக்கு முன், உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பூங்கா மருத்துவர்கள், அந்த சிங்கத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தது. தொடர்ந்து, பூங்கா மருத்துவர்கள், சிங்கத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அடக்கம் செய்தனர்.