கைகலப்பின்போது செயின் பறித்தவர் கைது
அரும்பாக்கம்,அரும்பாக்கம், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த வினோத்குமார், 42; தனியார் நிறுவன உதவி மேலாளர். இவர், சில நாட்களுக்கு முன், அரும்பாக்கம், ரசா கார்டன் பகுதியில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் மது அருந்தியுள்ளார். பின், வெளியில் வந்து, இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி சிகரெட் பிடித்ததாக தெரிகிறது.அப்போது, மது கூடத்தின் மேலாளரான சிவகங்கையைச் சேர்ந்த மாரிமுத்து, 39, என்பவர் கண்டித்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது, வினோத்குமார் அணிந்திருந்த 1 சவரன் செயின் மாயமானது. இது குறித்து, அரும்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், செயின் மாரிமுத்துவிடம் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்து, செயினை பறிமுதல் செய்தனர்.