வண்ண மீன் வியாபாரி வீட்டில் 100 சவரன் திருடியவர் சிக்கினார்
மாதவரம்:மாதவரம், சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் ஷாஜகான், 47; ரெட்டேரி பகுதியில் வண்ண மீன்கள் விற்பனை மற்றும் மீன்களுக்கு தேவையான உணவு வகைகளை தயாரித்து விற்று வருகிறார்.இவர், உறவினர்கள் ஏழு பேருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இடப்பற்றாக்குறை காரணமாக, வீட்டருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு பார்த்துள்ளார்.கடந்த 30ம் தேதி இரவு, வாடகைக்கு செல்ல வேண்டிய வீட்டை சுத்தப்படுத்தி அங்கேயே தங்கி உள்ளார். நேற்று முன்தினம் காலை அங்கு பால் காய்ச்சி விட்டு பழைய வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது, வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 100 சவரன் நகைகள், 45,000 ரூபாய் மற்றும் 'ஹூண்டாய் ஸ்போர்ட்ஸ்' கார் உள்ளிட்டவை திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து தகவலறிந்த கொளத்துார் போலீசார், மூன்று தனிப்படை அமைத்து கைரேகை பதிவுகளை ஆராய்ந்து விசாரித்தனர்.இதில், ஊத்துக்கோட்டை, தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளியான தீனா, 26, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. பெரம்பூர், லஷ்மி நகர், அண்ணா சிலை அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தீனாவை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.அவரிடமிருந்து கார், 'யமஹா ஆர்ஒன் 5' பைக், 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் மற்றும் 29 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.