போலீஸ் எனக்கூறி பணம் பறித்தவர் திருட்டு ஸ்கூட்டருடன் சிக்கினார்
தாம்பரம், தாம்பரத்தில், போலீஸ் எனக்கூறி கட்டுமான தொழிலாளர்களை மிரட்டி பணம் பறித்ததோடு, திருட்டு ஸ்கூட்டரில் உலாவந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன், 35; கட்டட கான்ட்ராக்டர்.தாம்பரம் - முடிச்சூர் சாலை குறிஞ்சி நகரில், இவர் வீடு கட்டி வரும் இடத்திற்கு, ஸ்கூட்டரில் காக்கி பேன்ட் அணிந்து, நேற்று முன்தினம் ஒருவர் வந்துள்ளார்.சிறிது நேரத்தில், அங்கிருந்த 'டிரில்லிங் மிஷின்' மற்றும் ஒரு பையை துாக்கிக்கொண்டு, ஓட்டம் பிடித்தார். இதை கவனித்த தொழிலாளர்கள், அந்த நபரை மடக்கி பிடித்தனர்.அப்போது, தான் தாம்பரம் குற்றப்பிரிவு போலீஸ்காரர் எனக் கூறியுள்ளார். சந்தேகமடைந்த தொழிலாளர்கள், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசாரின் விசாரணையில், பிடிபட்ட நபர், மேற்கு தாம்பரம், இரும்புலியூரைச் சேர்ந்த அந்தோணிதாஸ், 34, என்பதும், தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டுமான பணி நடக்கும் இடங்களுக்கு சென்று, வடமாநில மற்றும் வெளியூர் தொழிலாளர்களை, போலீஸ் எனக்கூறி மிரட்டி, பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.மேலும், அந்தோணிதாஸ் பயன்படுத்திய இருசக்கர வாகனம், இரும்புலியூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடையது என்பதும், அந்த வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, தாம்பரம் போலீசார் அந்தோணிதாஸை நேற்று முன்தினம் கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.