மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை புனரமைப்பு பணிகளை 2 வாரங்களில் முடிக்க திட்டம்
திருவொற்றியூர்:திருவொற்றியூர் மேற்கு 6வது மற்றும் 7வது வார்டுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நகர்களில், 70,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள், திருவொற்றியூர் கிழக்கு பகுதிக்கு செல்ல வேண்டும் எனில், ரயில்வே தண்டவாளங்களை கடக்க வேண்டிய சூழல் உள்ளது.மேற்கு பகுதி மக்களின் முக்கிய வழித்தடமாக, அம்பேத்கர் நகர் - மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. தினசரி, ஆயிரக்கணக்கான மக்கள் இதை பயன்படுத்தி வந்தனர். அதன்படி, காலை - மாலை பீக் ஹவர் வேளைகளில் போக்குவரத்து மிகுதியாக இருக்கும்.இதற்கிடையில், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை அமைத்து பல ஆண்டுகளாகி விட்டதால் பலவீனமாக உள்ளது. எனவே, சுரங்கப்பாதையை புனரமைத்துக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.அதன்படி, வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா தலைமையில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சென்னை மாநகராட்சி - பாலங்கள் துறை சார்பில், 1.50 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள், நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் காரணமாக, மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை மூடப்பட்டு மாநகராட்சியால் அறிவிப்பு பலகையும், நம் நாளிதழில் வெளியான செய்தியை பேனராகவும் வைத்துள்ளனர். இப்பணிகளை, 15 நாட்களில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுரங்கப்பாதை அடைக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் புலம்பியபடி பல கி.மீ., துாரம் பயணித்து, சத்தியமூர்த்தி நகர், மாட்டுமந்தை மேம்பாலம் வழியாக, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு செல்கின்றனர். பாதசாரிகள் வேறு வழியின்றி, சுரங்கபாதை மேல் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கின்றனர். உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதம் நிகழும் முன், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. ஆமை வேகம்ஏற்கனவே, அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில், 30 கோடி ரூபாய் செலவில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி 2022ல் துவங்கியது. ஆனால், 10 சதவீத பணிகள் கூட முடியவில்லை. ரயில்வே கேட் மூடப்பட்ட நிலையில், சுரங்கப்பாதை பணியும் மந்தமாக நடப்பதால், அப்பகுதி மக்கள் ஆபத்தான வகையில், தண்டவாளத்தை கடக்க வேண்டியுள்ளது. மாற்று பாதையாக, 1.5 கி.மீ., துாரம் பயணித்து மாட்டுமந்தை மேம்பாலம் வழியாக, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு சென்று வருகின்றனர்.விம்கோ நகர்அதேபோல விம்கோ நகர் ரயில்வே கேட் பகுதியில், கடந்தாண்டு மார்ச் 7ம் தேதி 25 கோடி ரூபாய் செலவில், சுரங்கப்பாதை கட்டுமானங்கள் துவங்கின. ரயில்வே தண்டவாளம் கீழ், 155 அடி துாரத்திற்கான பணிகள் முடிந்துள்ளன. மற்ற பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள், 4 முதல் 5 கி.மீ., துாரம் பயணித்து, மணலி விரைவு சாலை - ஜோதி நகர், சத்தியமூர்த்தி சந்திப்பு வழியாக வெளியேற வேண்டியுள்ளது.
மாற்றுபாதை
திருவொற்றியூர் மேற்கு மக்கள் வெளியேற மூன்று வழிகள் உள்ளது. இதில், அண்ணாமலை நகர் மற்றும் விம்கோ நகர் ரயில்வே கேட் பகுதிகளில், சுரங்கப்பாதை பணிகள் நடப்பதால், வழி மூடப்பட்டுள்ளது. ஒரே வழியான அம்பேத்கர் நகர் - மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, புனரமைப்பு பணிக்காக தற்போது மூடப்பட்டுள்ளது. மாற்று பாதை ஏதுமில்லை. இதனால், ஆபத்தான வகையில் தண்டவாளங்களை கடக்கும் போது, உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. பள்ளிகள் திறக்கும்முன் பணிகளை முடிக்க வேண்டும். தற்காலிகமாக மினி பேருந்து மேற்கு பகுதிக்கு இயக்க வேண்டும்.பாக்கியலட்சுமி, 53, சரஸ்வதி நகர், திருவொற்றியூர்.