உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மார்கழி இசை கச்சேரி -

 மார்கழி இசை கச்சேரி -

நா கஸ்வர வித்வான் 'பழையவண்ணை' சோமசுந்தரம், பிராட்வே, தமிழ் இசை சங்கத்தில் நிகழ்த்திய கச்சேரி, பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. இவருடன் இணைந்து, கலைஞர் பூவரசும் வாசித்தார். முதல் எடுப்பாக ஜி.என்.சுப்பிரமணியம், ஆதி தாளம், கானடா ராகத்தில் இயற்றிய 'நீயல்லால் இனி யாரெனை காப்பார்' எனும் கிருதியை, நாகஸ்வரத்தில் இருவரும் வாசித்தது, அரங்கில் திரண்ட ரசிகர்களுக்கு பக்தியை ஊட்டியது. அடுத்த பிடிப்பில், 'காப்பதுவே உனது பாதம்' எனும், தஞ்சை சிவானந்தம் இயற்றிய கிருதியை, ஆனந்தபைரவி ராகம், ரூபக தாளத்தில் துவங்கினர். இது செவிகள் வழியே நுழைந்ததும், உடம்பில் பூரிப்பு தொற்றிக் கொண்டது. தொடர்ந்து, தண்டபானி தேசிகரின் 'எனை நீ மறவாதே' கிருதியை எடுத்து கொண்டனர். ஆனந்தபைரவியில் இசைத்து, ஆரோகணம், அவரோகணத்தில் கவனம் ஈர்த்தனர். அம்பாளை போற்றும் இந்த கிருதியை, நாகஸ்வர இசையில் கேட்ட ரசிகர்கள், புதுவித மகிழ்ச்சியில் திளைத்திருப்பதை காண முடிந்தது. அதேபோல், ரேவதி ராகத்தில் அமைந்த, 'ஜனனி ஜனனி ஜனனி ஜெகத்காரணி' மற்றும் சுப்பிரமணிய பாரதியின், 'நெஞ்சுக்கு நீதி' ஆகிய கிருதிகளை திறம்பட இசைத்து, ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருந்தனர். பின், எம்.எஸ்.சுப்புலட்சுமி குரலுக்கு புகழ்பெற்ற, 'காற்றினிலே வரும் கீதம்' பாடலை இசைத்தபோது, காதுகளுக்கு இதமாக இருந்தது. பாபநாசம் சிவன் இயற்றிய, 'கற்பகமே கண்பாராய்' கிருதியை, மத்யமாவதி, ஆதி தாளத்தில் இசைத்து, மங்களமாய் நிறைவு செய்தனர். கச்சேரியில், தவில் வித்வான் சிவன்வாயில் ராஜரத்தினம், தவில் கலைஞர் கும்மிடிபூண்டி ஜீவானந்தம் ஆகியோரின் கைவித்தை, அரங்கு முழுதும் கைத்தட்டலை பெற்றது. மேலும், புவனேஷ்வரன் தாளம் இசைத்தார். நாதஸ்வரம் மாணவர்கள், விக்னேஷ், தினேஷ்குமார், குணசீலன், பாபுராஜ், நவீன்குமார் மற்றும் தவில் மாணவர்கள், புவனேஷ்வரன், சந்தோஷ், சாரதி, டில்லிகணேஷ் ஆகியோரும் பக்கபலமாய் இருந்தனர். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை