திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நடப்பாண்டின் மாசி மாத பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் இரவு, விநாயகர் வீதியுலாவுடன் துவங்கியது.நேற்று காலை 7:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் இந்திர வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்தார்.காலை 8:00 மணிக்கு உற்சவர் கொடி மரத்தின் எதிரே உற்சவர் முருகப்பெருமான் வந்தார்.சிறப்பு தீபாராதனை முடிந்ததும், கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. வரும், 21ம் தேதி மரத்தேர் திருவிழா, 22ம் தேதி வள்ளி திருமணம் நடக்கிறது. 24ம் தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.அதேபோல், குன்றத்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில் முதல் முறையாக இந்தாண்டு, பிரம்மோற்சவ விழா துவங்கியது. காலை 10:30 மணிக்கு, கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. மூலவர் முருகன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று, பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. இதற்காக, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கொடி கயிறை, கோவில் சிவாச்சாரியார்கள் ஏற்றினர். கோவில் வட்ட மண்டபத்தில் அதிகாலை 5:30 மணிக்கு உற்சவ கொடி ஏற்றப்பட்டது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று காலை 5:30 மணிக்கு பிரம்மோற்சவ விழா துவங்கியது. முதல் நாள் உற்சவமான நேற்று காலை, வெள்ளி விருஷப வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் ராஜ வீதிகளில் உலா வந்தார். இரவு, தங்க மான் வாகன உற்சவம் நடந்தது. வரும் 23ல் இரவு, வெள்ளி ரதம் உற்சவம் விமரிசையாக நடக்கிறது.திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், நேற்றிரவு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. கொடிமரத்திற்கு, பால், தயிர், பன்னீர், மஞ்சள் நீர் மற்றும் கலச நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, கொடியேற்றம் நடந்தது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள் 'ஒற்றீசா - தியாகேசா' என விண்ணதிர முழங்கினர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் 21, திருக்கல்யாணம் 23ம் தேதி நடக்கிறது.- நமது நிருபர் -