எம்.சி.சி., முருகப்பா ஹாக்கி லீக்: இந்திய ரயில்வே அணி வெற்றி
சென்னை,சென்னை எம்.சி.சி., முருகப்பா ஹாக்கி லீக் போட்டியில், இந்திய ரயில்வே அணி, 4 - 2 என்ற கோல் கணக்கில், மஹாராஷ்டிரா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. எம்.சி.சி., முருகப்பா குரூப்ஸ் சார்பில், அகில இந்திய அளவில், '96வது முருகப்பா தங்கக் கோப்பை' ஹாக்கி தொடர், எழும்பூர் ராதாகிருஷ்ணா ஹாக்கி அரங்கில் நடந்து வருகிறது.தமிழகம், மகாராஷ்டிரா உட்பட, அகில இந்திய அளவில் சிறந்த ஒன்பது அணிகளும், ஒரு வெளிநாட்டு அணியும் பங்கேற்றுள்ளன.அந்த வகையில் நேற்று முன்தினம் நடந்த, 'பி' பிரிவு போட்டியில், இந்திய ரயில்வே அணி, 4 - 2 என்ற கோல் கணக்கில், எதிர்த்து விளையாடிய ஹாக்கி மஹாராஷ்டிரா அணியை வீழ்த்தி, தன் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்திய ரயில்வே சார்பில், குர்சாஹிப்ஜித் சிங், 18வது நிமிடத்தில் ஒரு பீல்ட் கோல், தர்ஷன் கவ்கர், 53வது நிமிடத்தில் ஒரு பீல்ட் கோல், கவுடா, 56வது நிமிடத்தில் ஒரு பெனால்டி ஸ்ட்ரோக், சண்முகம் 57 வது நிமிடத்தில், ஒரு பீல்ட் கோல் அடித்து அசத்தினர்.மஹாராஷ்டிரா அணி சார்பில், கணேஷ் பாட்டீல் 32வது நிமிடம், ரோஹன் பாட்டீல் 57வது நிமிடம் என, தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தனர். அடுத்த போட்டியில், இந்திய ஆர்மி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில், போபால் அணியை வீழ்த்தி, தன் முதல் வெற்றியை பதிவு செய்தது.