மேம்பாலத்தில் இருந்து விழுந்த மெக்கானிக் பரிதாப பலி
மேடவாக்கம், கட்டுப்பாட்டை இழந்த பைக், பக்காவட்டு சுவரில் மோதி, 60 அடி உயர மேம்பாலத்தில் இருந்து துாக்கி வீசப்பட்ட மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.பள்ளிக்கரணை, பெரியார் நகர், கவிமணி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 25. இவர், மேடவாக்கம், யமஹா பைக் சர்வீஸ் சென்டரில், மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, வேளச்சேரி- - தாம்பரம் சாலையில், பள்ளிக்கரணை நோக்கி, பைக்கில் வேகமாக சென்றார்.மேடவாக்கம், மேம்பாலம் திருப்பத்தில் சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டு சுவற்றில் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட அவர், 60 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், அவரின் வலது கை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்.அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.விபத்து குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.சமீபத்தில் உடல்நலக்குறைவால் மணிகண்டனின் தந்தை நடேசன் இறந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டனும் விபத்தில் உயிரிழந்தது, குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.