பகிங்ஹாம் கரையில் மருத்துவ கழிவுகள் திருவொற்றியூரில் மீண்டும் அதிர்ச்சி
திருவொற்றியூர்:பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய காலி நிலத்தில், மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், திருவொற்றியூர் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவொற்றியூர், ஏழாவது வார்டு, வெற்றி விநாயகர் நகர் - பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய காலி நிலத்தில், சில மாதங்களுக்கு முன், அனுமதியின்றி சிலர், லாரி லாரியாக மருத்துவ கழிவுகள் கொட்டிச் செல்வதாக புகார் எழுந்தது. இது குறித்து மண்டல குழு கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் எழுப்பிய கேள்விக்கு, 'அவை மருத்துவ கழிவுகள் கிடையாது' என, பதிலளிக்கப்பட்டது. கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றிட வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அகற்றியபாடில்லை. இந்த நிலையில், அதே பகுதியில் மீண்டும், பயன்படுத்தப்பட்ட மருந்து பாட்டில்கள், கையுறை உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மருத்துவ கழிவுகளை அகற்றி, விதிமீறியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.