உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளையாட்டில் சாதிக்கும் வீரர்களால் மனநல காப்பக அடையாளம் மாறுது

விளையாட்டில் சாதிக்கும் வீரர்களால் மனநல காப்பக அடையாளம் மாறுது

சென்னை; அயனாவரம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருவோரில், 50 பேர், விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவிப்பதால், காப்பகத்தின் அடையாளமே மாறி வருகிறது. சென்னை, அயனாவரத்தில், 225 ஆண்டுகளாக அரசு மனநல காப்பகம் உள்ளது. தற்போது, 800க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு, தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சிகிச்சை முடிந்து பலர் குணமான பிறகும் உறவினர்களால் கைவிடப்படுவதால், அங்கேயே தங்கி விடுகின்றனர். அவ்வாறு குணமடைந்து, தஞ்சமடைவோருக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகளும், கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. காப்பக கணக்காளரும், பாராலிம்பிக் வீரருமான மணிகண்டன், காப்பகத்தில் உள்ளோரில் உற்சாகமும், விளையாட்டில் ஆர்வமும் உள்ள 50 பேரை, 2021ல் தேர்வு செய்து, பலவித விளையாட்டு பயிற்சிகளை அளிக்கிறார். அவர்களில் நான்கு பேர், தேசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர். சிறப்பு ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்கும் வகையில், தங்கள் பயிற்சியை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுபோன்ற சாதனையாளர்களால், மனநலக் காப்பகத்தின் அடையாளம் மெல்ல மெல்ல மாறி வருகிறது. இதுகுறித்து, மனநல காப்பக திறன் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சங்கீதா கூறியதாவது: தற்போது காப்பகத்தில் தங்கியுள்ளோரில், 20க்கும் மேற்பட்டோர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதிகளை பெற்றுள்ளனர். குறிப்பாக 400, 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், கைப்பந்து, நீளம் தாண்டுதல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். புறநோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நரேஷ் என்பவர், கைப்பந்து போட்டியில் தேசிய அளவில் பதக்கம் பெற்றுள்ளார். அதேபோல், வெங்கடேசன், ரம்யா ஆகியோர், நீளம் தாண்டுதலிலும், ரோஹிமா என்பவர், இலக்கை நோக்கி பந்தை எறியும், 'போசி' போட்டியிலும் வென்றுள்ளனர். மேலும், தடகளப் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை