வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய மனநலம் பாதித்த நபர்
சிட்லப்பாக்கம்:சிட்லப்பாக்கத்தில், ஒரு வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சிட்லப்பாக்கம், முனுஆதி தெருவில் வசிப்பவர் சேஷாத்ரி. நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்தது. சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்ற சிட்லப்பாக்கம் போலீசார், அவ்வீடு முழுதும் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து சோதனை நடத்தினர். அதில், அது புரளி என்பது தெரியவந்தது. விசாரணையில், வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிய நபர், சிட்லப்பாக்கம், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாரதிதாசன், 39, என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் ஏழு ஆண்டுகளாக, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார், பாரதிதாசனின் பெற்றோரை வரவழைத்து, எச்சரித்து அனுப்பினர்.