மெட்ரோ ரயில் வழித்தட மேம்பால பணி போரூர் - கோடம்பாக்கத்தில் இறுதிக்கட்டம்
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம், மூன்று வழித்தடங்களில் கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி வரையிலான 26 கி.மீ., துார வழித்தடமும் ஒன்றாக இருக்கிறது. இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை மேம்பால பாதையாகவும் அமைக்கப்படுகிறது. இதில், போரூர் - கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ பணிகள், முழு வீச்சில் நடக்கின்றன. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி -- கலங்கரை விளக்கம் வழித் தடத்தில், ஒரு பகுதியாக போரூர் - கோடம்பாக்கம் மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, மேம்பால பாதை பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளன. 50 சதவீத ரயில் பாதை பணிகளும், சிக்னல், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 40 சதவீதமும் முடிந்துள்ளன. இந்த வழித்தடத்தில், இரட்டை அடுக்கு பாதையில் கட்டுமானப்பணியும் தாமதம் இன்றி நடந்து வருகின்றன. அனைத்து பணிகளும், 2026 ஜூன் மாதத்துக்குள் முடித்து, மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.