எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சராக்க திட்டமிட்டிருந்தார்: சைதை துரைசாமி
சென்னை, அ.தி.மு.க., நிறுவனர்,முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்ட அறிக்கை:சித்தர்கள், புலவர்கள், மத போதகர்கள், தத்துவ ஞானிகள், அரசியல் தலைவர்கள், பொருளாதார அறிஞர்கள் எல்லாம் கூறிய கருத்துகளை, சினிமா படங்களின் தலைப்பாக, வசனமாக, பாடலாக, காட்சிகளாக கொடுத்த முதல் சீர்திருத்த கலைஞன் எம்.ஜி.ஆர்., அதனால், மக்கள் அவரை குல தெய்வமாக கும்பிடுகின்றனர்.உழைத்து சம்பாதித்த பணத்தை, வாரி வழங்கிய எம்.ஜி.ஆர்., ஒரு கலியுக வள்ளல். அதனால், அவர் படுத்துக்கொண்டே தேர்தலில் வென்றார். இறுதிவரை முதல்வராகவே இருந்தார். சினிமா படத்தில் சொன்னதை எல்லாம் நிஜத்திலும் நடத்தி காட்டியவர் அவர். பொறியியல் கல்லுாரி என்ற எம்.ஜி.ஆரின் தொலைநோக்கு சிந்தனையால்தான், தமிழர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகெங்கும் வெற்றி நடை போடுகின்றனர். மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., அறக்கட்டளை நடத்துவதற்கும், நேர்மையான மேயராக பணியாற்றியதற்கும், அவரது வழிகாட்டுதலே காரணம்.கடந்த 1984ல் என்னையும் சேர்த்து, 12 இளைஞர்களை அமைச்சராக்க எம்.ஜி.ஆர்., திட்டமிட்டிருந்தார். இது மட்டும் நடந்திருந்தால், கட்சியிலும், ஆட்சியிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும்.மறைந்து 37 ஆண்டுகளுக்குப்பிறகும், அவரதுசெல்வாக்கு மக்களிடம் கண்ணுக்கு தெரியாத மின்சாரமாக நிலைத்திருப்பதை கண்டு உலகமே வியக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.