ஆளுக்கு ஒரு கார் வைத்திருப்பதால் மத்திய கைலாஷில் வாகன நெரிசல் அமைச்சர் எ.வ.வேலு புது விளக்கம்
கொளத்துார், ''மத்திய கைலாஷில் வாகன நெரிசல் அதிகரிக்க, வீட்டுக்கு ஒரு கார் என்றில்லாமல், வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கார் இருப்பதே காரணம்,'' என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். கொளத்துார் ரெட்டேரி சாலை சந்திப்பு அருகில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் எனும் சி.எம்.டி.ஏ., சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்துார் ஏரிக்கரை பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர். அப்போது, அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, கொளத்துார் ரெட்டேரி சாலையில் உள்ள ஏரி மேம்படுத்தப்படுகிறது. 5 கோடி ரூபாய் மதிப்பில், 7 மீட்டர் அகலம், 600 மீட்டர் நீளத்தில் நடைபாதை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. கொளத்துார் செந்தில்நகரில், நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. 15.42 கோடி ரூபாய் செலவில் அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. ரெட்டேரி பணிகளை, ஆகஸ்ட் மாதம் முடிக்க ஒப்பந்ததாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் மழைக்கு முன்பாக முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை மேம்பாலப் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. வரும் பொங்கல் தினத்தில், அப்பாலத்தை முதல்வர் திறந்து வைப்பார். மத்திய கைலாஷ் பகுதிகளில் உள்ளோர், வீட்டிற்கு ஒரு கார் என்றில்லாமல், ஆளுக்கு ஒரு கார் வைத்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள சாலையை விரிவுபடுத்தி, சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி, மேம்பால பணிகள் முடிந்த பின், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.