மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மீஞ்சூர் பெண் கைது
ஆவடி, மீஞ்சூர் புங்கம்பேடை சேர்ந்தவர் சதீஷ்குமார், 44. இவர், வேலைவாய்ப்பு மோசடி குறித்து, கடந்த ஜனவரி 7ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்:என் மைத்துனர் டிக்ரூஷ் என்பவர் வாயிலாக, மீஞ்சூர், வ.உ.சி., தெருவைச் சேர்ந்த மாதுரி, 37 என்பவர் எனக்கு அறிமுகமானார். ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக வேலை செய்து வருவதாக மாதுரி கூறினார். கொரோனா காலகட்டத்தில், ஓமந்துாரார் மருத்துவமனையில் புதிதாக உதவியாளர், லேப் டெக்னீசியன், செவிலியர், வரவேற்பாளர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். மாதுரி கூறியதை உண்மை என நம்பி, மனைவி, உறவினர்கள் உட்பட 25 நபர்களிடம், 2023 முதல் வேலைக்கு தகுந்தவாறு, 50,000 ரூபாய், ஒரு லட்சம், 1.50 லட்சம் ரூபாய் என, பல தவணைகளில் மொத்தம் 10.26 லட்சம் ரூபாய் வரை பெற்று ஜி.பே., செயலி வாயிலாக, மாதுரிக்கு அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்ட மாதுரி, வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் தரணிபாய் தலைமையில் தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த மாதுரியை தேடி வந்தனர். நேற்று முன்தினம் செங்குன்றம் அடுத்த ஜனப்பச்சத்திரம் கூட்டு சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு மாதுரி வந்த போது, தனிப்படை போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.