சென்னை, தமிழர்களுக்கான முதல் ஹைப்பர்லோக்கல் சமூக ஊடகம் என்ற அடையாளத்துடன் அறிமுகமான 'மின்மினி' செயலி, தமிழகத்தில் மட்டுமல்லாது, உலகம் முழுதும் தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.மின்மினி செயலியை பயன்படுத்துவோருக்கு, மேலும் ஊக்கமளிக்கும் வகையில், '#வணக்கம் மின்மினி' ஐபோன் போட்டி, ஜன., 27ல் துவங்கப்பட்டது.இதில் பங்கேற்போர், தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்மினி செயலியில், '#வணக்கம் மின்மினி' என்ற ஹாஸ்டாக்கை பயன்படுத்தி, பதிவுகள் வெளியிட வேண்டும்.ஒரே நபர் எத்தனை போட்டோ, வீடியோக்களையும் பதிவிடலாம். 15 நாட்கள் நடந்த இப்போட்டி, கடந்த 8ம் தேதி நிறைவு பெற்றது.லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இப்போட்டியில், அதிக லைக்ஸ்கள் பெற்ற, சென்னை தரன்ராஜ், பெங்களூர் வினுஷா, திருச்சி பிரியாமதி ஆகியோருக்கு, 'ஐபோன்' பரிசாக வழங்கப்பட்டது.சென்னையில் உள்ள மின்மினி செயலி அலுவலகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் அதன் துணைத் தலைவர் ஸ்ரீராம், ஊழியர்கள், வெற்றி பெற்ற மூவரின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.அப்போது பேசிய ஸ்ரீராம், ''உலகளாவிய தமிழ் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதை மையாக கொண்டு செயல்படும் மின்மினி செயலி நடத்திய முதல் போட்டி இது. இதற்கு, மக்கள் வழங்கிய பேராதரவு எங்களை ஊக்கப்படுத்துகிறது. மேலும் பல போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.