எம்.ஓ.பி., வைஷ்ணவா அணி கூடைப்பந்தில் சாம்பியன்
சென்னை:சென்னை, கோயம்பேடில் இயங்கி வரும் செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், கல்லுாரிகள் இடையிலான பெண்கள் பிரிவு கூடைப்பந்து போட்டி, கடந்த 5 முதல் 8ம் தேதி வரை நடந்தது.இப்போட்டியில், ராணிமேரி, நியூ பிரின்ஸ், எம்.ஓ.பி., வைஷ்ணவா, எத்திராஜ், எஸ்.ஆர்.எம்., நசரேத் உட்பட 14 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'நாக் - அவுட்' முறையில் நடந்தன.இதில், துவக்கம் முதலே ஒவ்வொரு போட்டியிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி அணி வீராங்கனையர், அரையிறுதியில் ராஜேஸ்வரி கல்லுாரி அணியை 67 - 17 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வென்றனர்.பின், இறுதி போட்டியில் எத்திராஜ் கல்லுாரி அணியை எதிர்கொண்ட எம்.ஓ.பி., அணி வீராங்கனையர், 78 - 48 என்ற புள்ளிக்கணக்கில் இந்த ஆட்டத்தையும் வென்று, கோப்பையை தங்கள் வசப்படுத்தினர்.