சென்னை, பெரும்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகம், 200 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு, 18,000 அடுக்குமாடி வீடுகள், அரசு கல்லுாரி, ஐ.டி.ஐ., எட்டு அரசு பள்ளிகள், ஐந்து ரேஷன் கடைகள், எட்டு குழந்தைகள் மையங்கள், காவல் நிலையம், மின் வாரிய அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் உள்ளன.இந்த 200 ஏக்கர் இடம், பெரும்பாக்கம் ஊராட்சி வசம் உள்ளது. ஆனால், குப்பை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி செய்கிறது. இதற்காக, ஆண்டுதோறும், வாரியம் மாநகராட்சிக்கு, 1.72 கோடி ரூபாய் செலுத்துகிறது. இங்கு, 40 தொட்டிகள் வைத்து குப்பை சேகரிக்க, 50 பேர் உள்ளனர். ஆனால், 18,000 வீடுகளுக்கு மட்டும் கணக்கிட்டு, பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. அரசு நிறுவனங்களில் சேரும் குப்பையை அகற்ற பணம் வழங்கப்படவில்லை என, மாநகராட்சி கூறுகிறது.இதனால், அரசு நிறுவனங்களில் சேரும் குப்பையை, மாநகராட்சி அகற்றுவதில்லை. இந்த குப்பை கழிவுகள், சாலையோரம், நீர்நிலைகள் கரைகளில் கொட்டப்படுகின்றன.அதேபோல், தென்சென்னையில் உள்ள 60க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் வெள்ளம், 200 அடி அகலம் உடைய செம்மஞ்சேரி கால்வாய் வழியாக செல்கிறது.இந்த கால்வாய் அருகில், அரசு நிறுவனங்கள் உள்ளன. குப்பையை இந்த கால்வாயில் கொட்டுவதால், சதுப்பு நிலப் பகுதியில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும், இந்த கால்வாயை ஒட்டி உள்ள சாலையில், இறைச்சி, மருத்துவ கழிவுகள் மற்றும் ஊராட்சி எல்லையில் இருந்து அகற்றும் குப்பையும் கொட்டப்படுகிறது.இந்த குப்பையும், கால்வாயில் விழுந்து அடைப்பு ஏற்படுத்தி, நீர்நிலைகளை மாசடைய செய்கிறது. வாரிய அதிகாரிகள், 200 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பையை முறையாக கையாள தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.