எம்.ஆர்.எப்., கோப்பை பேட்மிண்டன் எம்.சி.சி., முதலிடம்
சென்னை:எம்.சி.சி., - எம்.ஆர்.எப்., கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டியில், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி, ஐந்து பிரிவுகளில் முதலிடங்களை கைப்பற்றி அசத்தியது.எம்.சி.சி., பள்ளி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி வளாகத்தில் நடத்தியது. இதில், வாலிபால் மற்றும் பேட்மிண்டன், கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. போட்டியில், செட்டிநாடு வித்யாஷ்ரம், கே.பி.ஜே., குருகுலம், எம்.சி.சி., - லிட்டில் பிளவர் உள்ளிட்ட, 16 பள்ளிகள் பங்கேற்றன.பேட்மிண்டன் போட்டியில், 14, 17 மற்றும் 19 வயதினருக்கு தனிநபர் மற்றும் இரட்டையருக்கான போட்டிகள் நடந்தன. இதில், 14 வயது பிரிவில் மட்டும் இருபாலருக்கும் நடந்தன.இதில், 19 வயதினருக்கான தனிநபரில் இறுதிப் போட்டியில், எம்.சி.சி., பள்ளி, 15 - 12, 15 - 9 என்ற கணக்கில், வளசரவாக்கம் வாணி வித்யாலயா பள்ளி தோற்கடித்தது முதலிடத்தை பிடித்தது. இரட்டையரில் எம்.சி.சி., பள்ளி, 15 - 10, 15 - 07 என்ற கணக்கில், வளசரவாக்கம் வாணி வித்யாலயா பள்ளியை வீழ்த்தியது.அதேபோல், 17 வயது தனிநபரில் எம்.சி.சி., பள்ளி, 15 - 12, 15 - 07 என்ற கணக்கில், பெரம்பூர் செயின்ட் மேரிஸ் பள்ளியை வீழத்தி முதலிடம் பிடித்தது. இரட்டையரில் விருகம்பாக்கம் காவேரி பள்ளி, 15 - 14, 12 - 15, 15 - 13 என்ற கணக்கில், எம்.சி.சி., பள்ளியை தோற்கடித்து வெற்றி பெற்றது. தனிநபர் 14 வயது பிரிவில், மதுரவாயல் பாரதி மெட்ரிக் பள்ளி முதலிடமும், எம்.சி.சி., இரண்டாமிடமும், இரட்டையரில் எம்.சி.சி., முதலிடமும், பெரம்பூர் செயின்ட் மேரிஸ் இரண்டாம் இடத்தையும் கைப்பற்றின. அதே வயது பிரிவில், மாணவியரில் தனிநபரில், குட்சபேட் பள்ளி முதலிடத்தையும், நுங்கம்பாக்கம் பி.எஸ்.பி.பி., பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. இரட்டையரில், எம்.சி.சி., பள்ளி முதலிடத்தையும், நுங்கம்பாக்கம் பி.எஸ்.பி.பி., பள்ளி இரண்டாம் இடத்தையும் வென்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, எம்.சி.சி., பள்ளி முதல்வர் ஜெபதாஸ் தினகரன் பரிசுகளை வழங்கினார்.