உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலவாக்கம் கடற்பகுதியில் பறந்த மர்ம ட்ரோன் நீண்ட நேரம் வட்டமடித்ததால் பரபரப்பு

பாலவாக்கம் கடற்பகுதியில் பறந்த மர்ம ட்ரோன் நீண்ட நேரம் வட்டமடித்ததால் பரபரப்பு

சென்னை, லவாக்கம் கடற்கரையை ஒட்டிய பகுதியில், மர்ம 'ட்ரோன்' ஒன்று இரவில் நீண்ட நேரம் வட்டமடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை இயக்க, டி.ஜி.சி.ஏ., எனும் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் கட்டுப்பாடு விதித்துள்ளது; இதை மீறி இயக்குவது சட்டவிரோதமானது.இதற்கிடையே, சென்னை பாலவாக்கம் கடற்கரை பகுதியில், கடந்த 17ம் தேதி இரவு ட்ரோன் வடிவிலான மர்ம பொருள் நீண்ட நேரம் பறந்துள்ளது. வித்தியாசமானதாக இருந்ததால், பார்த்தவர்கள் பீதி அடைந்துள்ளனர்.இதை நேரில் பார்த்த பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா கூறியதாவது:கடந்த 17ம் தேதி இரவு 10:00 மணிக்கு, வீட்டில் வளர்க்கும் நாய்களை பாலவாக்கம் கடற்கரை பகுதிக்கு அழைத்து சென்றேன். அப்போது 100 மீட்டர் தொலைவில், ட்ரோன் வடிவிலான பொருள் அலைகள் வரும் இடத்திற்கு சற்று தொலைவில் நின்றது.முதலில் ஏதாவது சினிமா படப்பிடிப்பிற்காக இருக்கும் என நினைத்தேன். அது பார்ப்பதற்கு சற்று வினோதமாக இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் வடக்கு நோக்கியபடி பறந்தது. இப்படியே அரை மணிநேரத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்தது. கடற்கரை பகுதியில் அதுவும் இரவில் பறப்பது, சற்று வினோதமானதாக இருந்தது.யாராவது உளவு பார்க்கின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு எண்ணிற்கு தொடர்பு கொண்டேன். அடுத்த 30 நிமிடங்களில் ரோந்து போலீசார் தொடர்பு கொண்டனர். அவர்கள் விபரங்கள் கேட்டறிந்தனர்.நாளை சிவில் உடையில் வந்து, உயர்வான கட்டடத்தின் மேல் இருந்து நாங்கள் கண்காணிக்கிறோம் என, சொல்லி சென்றனர்.இது குறித்து டி.ஜி.சி.ஏ., அதிகாரிகளிடம் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களை, அதிகாரிகள் தாமதப்படுத்தாமல் விசாரிப்பதே பாதுகாப்பானதாக இருக்கும். பாலவாக்கம் மற்றும் சுற்றவட்டார இடங்களில் இது போன்ற சம்பவங்கள், சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. உரிய நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ